கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம் போதையை அதிகரிக்க மெத்தனால் கலந்ததாக சாராய வியாபாரி கோவிந்தராஜ் ஒப்புதல்

கள்ளகுறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக பிரபல சாராய வியாபாரி கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது போதையை அதிகரிக்க சாராயத்தில் மெத்தனால் கலந்ததாக தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சிகிச்சை பலனின்றி நேற்றுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுவை மடுகரை மாதேஷ், பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று காவல் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் சந்த் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணை தொடங்கினர். அவர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், நாங்கள் மாதவரம் பகுதியில் கெமிக்கல் கம்பெனி நடத்தி வருகிறோம். புதுவை மடுகரை பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர் தின்னர் பயன்பாட்டிற்காக மெத்தனால் தேவை என கேட்டதை தொடர்ந்து. நாங்கள் 190 கிலோ எடைகொண்ட 19 பேரல்கள் மெத்தனாலை சப்ளை செய்தோம் என கூறினர்.

கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் மற்றும் இவரது மனைவி விஜயா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் போதையை அதிகரிக்க சாராயத்தில் மெத்தனால் கலந்ததை ஒப்புக்கொண்டனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தோம், இதில் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட மல்லிகைபாடி ஏழுமலை, சேஷசமுத்திரம் பிரபல சாராய வியாபாரி சின்னதுரை மற்றும் சங்கராபுரம் பகுதியை சேரந்த ஜோசப்ராஜா உள்ளிட்ட பலரிடமும் கள்ளச்சாராயம் வாங்கி கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்தோம்.

மேலும் சம்பவத்திற்கு முன்னதாக கள்ளச்சாராயம் வாங்கி குடித்த மதுபிரியர்கள் சரியாக போதை ஏறவில்லை, சரக்கு சரியில்லை என எங்களிடம் புகார் கூறினர். இதையடுத்து விற்பனையை அதிகரிக்கவும், போதையை அதிகரிக்கவும் திட்டமிட்டு கள்ளச்சாராயத்துடன் மெத்தனாலை கலந்தால் போதை அதிகரிக்கும் என ஒரு சிலர் சொன்னதால் நாங்கள் மெத்தனால் கலக்க முடிவு செய்தோம். மல்லிகைபாடி சாராய வியாபாரி ஏழுமலையிடம் கள்ளச்சாராயம் வாங்கி வந்து சின்னதுரையிடம் ஏற்கனவே கேட்டிருந்த மெத்தனாலை வாங்கி கள்ளச்சாராயத்துடன் கலந்து பாக்கெட் சாராயமாக தயார் செய்து விற்பனை செய்ேதாம்.

அன்று விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை குடித்தவர்கள் வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரத்திற்கு பின்புதான், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்ததால் விஷசாராயமாக மாறியது எங்களுக்கு தெரியவந்தது என கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா ஆகியோர் சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்தனர். இரண்டாவது நாளான இன்று சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ் உள்ளிட்டோர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நாளை 3ம் தேதி குற்றவாளிகள் 11 பேரையும் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் உடைக்க உள்ளனர்.

Related posts

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு