கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது: ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து பெரிய போர்க்களத்திலே இறங்கியுள்ளோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மும்பை: ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து பெரிய போர்க்களத்திலே இறங்கியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெங்களூருவை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது:

ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடத்திவருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வலிமை மிக்க கூட்டணியாக உள்ளது. 19 கட்சிகளை ஒன்றிணைத்து முதல் கூட்டத்தை பாட்னாவில் நடத்தினோம். ஒற்றுமையாக இருந்து பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என முதல் கூட்டத்தில் முடிவு செய்தோம். பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி என்று பெயர் சூட்டினோம்.

இந்தியா கூட்டணி வலிமைமிக்கது என்பதை நிரூபித்துள்ளோம்:

மும்பையில் 28 கட்சிகளை ஒன்றிணைத்து வலிமைமிக்க கூட்டணி என்று நிரூபித்துள்ளோம். பாஜக அரசு எப்படி சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

பாஜக அரசின் சாதனைகளாக எடுத்துக் கூற மோடிக்கு எதுவும் இல்லை:

பிரதமர் மோடியால் தமது அரசின் சாதனைகளைப் பற்றி பேச முடியவில்லை. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் எந்த சாதனைகளும் இல்லை. பாஜக அரசின் சாதனைகளாக எடுத்துக் கூற பிரதமர் மோடிக்கு எதுவும் இல்லை. பாஜக அரசை எதிர்த்து நடைபெறும் போரில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்தியா கூட்டணியின் சிறந்த விளம்பரதாரர் பிரதமர் மோடி:

இந்தியா கூட்டணியின் சிறந்த விளம்பரதாரராக செயல்படுகிறார் பிரதமர் மோடி என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது இந்தியாவின் திருப்புமுனை கூட்டம். பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை சொல்ல முடியாமல் இந்தியா கூட்டணியைப் பற்றியே பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தியும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை என முதல்வர் கூறினார்.

பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் டவுன் நடந்து வருகிறது:

பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து பெரிய போர்க்களத்திலே ஈடுபடவிருக்கிறோம். அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது. நாளுக்கு நாள் மத்திய பாஜக அரசு Unpopular ஆகிவருகிறது; இந்தியா கூட்டணி Popular ஆகி வருகிறது. இந்தியாவில் இதுவரை காண முடியாத சர்வாதிகார ஆட்சியை நாம் கண்டு வருகிறோம். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மாண்பை காக்கவே இந்தியா கூட்டணி:

இந்தியா கூட்டணி என்பது அரசியல் லாபத்துக்காக அல்ல; நாட்டின் மாண்பை காக்கவே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மதச்சார்பின்மை, சமூகநீதியைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி