கவுன்சிலரின் கணவர் தாக்கியதில் வாலிபருக்கு கழுத்தில் எலும்பு முறிவு: வீடியோ வைரல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியின் 23வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் கவிதா புருஷோத்தமன் (42). இந்த வார்டில் உள்ள ரயில்வே காலனி சாலையில் வசித்து வரும் கவுதம் சக்கரவர்த்தி (31) அப்பகுதியில் தூய்மைப்பணி முழுமையாக மேற்கொள்ளவில்லை என சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் வந்து அப்பகுதியில் தங்களது பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கவுன்சிலர் கவிதா, அவரது கணவர் புருஷோத்தமன், மகன் கார்த்திக் (23), அவரது நண்பர் நசீர் (48) உள்ளிட்ட 4 பேரும் தூய்மை பணியாளர்களிடம் வேலையை நிறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை பார்த்த கவுதம் சக்கரவர்த்தி, தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கவுதமை தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலரின் கணவர் புருஷோத்தமன் கைகளால் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த கவுதம் சக்கரவர்த்தி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து கவிதா, புருஷோத்தமன், கார்த்திக், நசீர் ஆகிய 4 பேரும் இணைந்து கவுதம் சக்கரவர்த்தியை தாக்கியதாக தெரிகிறது. இதில் கவுதம் சக்கரவர்த்திக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது..இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எல்.முருகன் கன்டணம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போராடிய கவுதமை, கவுன்சிலர் மற்றும் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் அவரது கணவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!