சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் திடீர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் திடீரென மயங்கி விழுந்து பலியானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில், சென்னை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சி 146வது வார்டு கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் (68) கலந்து கொண்டார்.

பேரணி வாலாஜா சாலையை கடந்த போது, சண்முகம் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக பேரணியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திமுக கவுன்சிலர் உயிரிழந்த தகவலறிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது அவரது உடலுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த ஆலப்பாக்கம் சண்முகம் 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மதுரவாயல் நகரமன்ற தலைவராக பதவி வகித்துள்ளர். 3 முறை வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அவர் கவுன்சிலர் பதவியுடன் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். சென்னை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். மறைந்த சண்முகத்திற்கு சுமதி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், தினகரன் என்ற மகனும் உள்ளனர். இதில் தினகரன், திமுக தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பெருநகர சென்னை மாகராட்சியின் 146வது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம், கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன். மதுரவாயல் பகுதியில் திமுகவை வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், திமுக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு