பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் இன்று ‘‘நடப்போம் நலம் பெறுவோம்’’ நடைபயிற்சி: அமைச்சர் தொடங்கி வைக்கிறார்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘நடப்போம் நலம் பெறுவோம்’’ திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறிந்து, பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நலவாழ்வு பேணுவதற்கான நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவள்ளுர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையும், ஆவடி மாநகராட்சியும் இணைந்து, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் 8 கி.மீ தூரம் நடைபாதை கண்டறியப்பட்டுள்ளது. இன்று, நடைபெறும் துவக்க விழாவிற்கு கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்குகிறார். கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் தடுக்கலாம். அதேபோல், சர்க்கரை நோயால் பாதித்தோர் நடந்தால் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொளளவும் முடியும். பொதுவாக நடப்பதன் மூலம் அனைவரும் உற்சாகம் பெறவும் முடியும். அதனால், நடைபாதையில் ஒவ்வொரு 1 கி.மீ தூரத்திலும் நடைப்பயிற்சியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பதாகையும், ஆங்காங்கே ஓய்வு பெற சிமெண்ட் இருக்கைகளும், மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள், நடைப்பயிற்சி சங்கத்தினர்கள் அனைவரும் தவறாமல் நடைபயிற்சி திட்டத்தில் பங்கேற்று உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’