தமிழகத்தில் பருத்தி விவசாயிகள் பாதிப்பு பருத்திக்கும் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் பருத்தி விவசாயிகளின் பாதிப்பை கவனத்தில் கொண்டு பருத்திக்கும் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனவரி முதல் ஜூலை வரை கோடை காலம் என்பதால் விவசாயிகள் பருத்தியை விதைக்கின்றனர். ஓரளவு லாபம் கொடுக்கும் பயிர் என்பதால் தண்ணீரை விலைக்கு பெற்றாவது பலர் சாகுபடி செய்கின்றனர்.

கடந்தாண்டின் விலை குறைவால் தற்போது பாதி அளவே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு பருத்தி செடிகள் பூக்கும் காலம் முதல் பருவம் தவறிய மழை விட்டு விட்டு பொழிவதால் தண்ணீர் தேங்கி பல இடங்களில் செடிகள் அழுகி காய்ந்தன. காய்ந்த செடிகளின் பாதிப்பை மட்டும் தமிழக அரசு கணக்கீடு செய்து நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால் பூக்கள், காய்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்டது தான் அதிகம். ஆனால் அரசின் நிவாரண கணக்கீட்டில் இதை சேர்க்கவில்லை.

இந்த நிலையில் எஞ்சிய பருத்தியை எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்தால் அதைவிட பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது. ஒன்றிய அரசு அறிவிக்கும் நெல் விலை கட்டுப்படியானது இல்லை என்பதால் தான் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதுபோல தமிழக பருத்தி விவசாயிகளின் நடப்பாண்டு பாதிப்பை கவனத்தில் கொண்டு பருத்திக்கும் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக தொழிலதிபரிடம் கைவரிசை பிரபல மோசடி மன்னன் முகமது தாவூத் கான் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்