மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் இந்தாண்டு நல்ல மகசூல்

*விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடியில் இந்தாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, மங்கைமேடம், குத்தாலம், செம்பனார்கோயில், வைத்தீஸ்வரன் கோயில், ஆக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு சுமார் 13 ஆயிரத்து 500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு பருத்தி பயிரிட்ட பின் சுமார் ஆறுமுறை வரை பருத்தி மகசூல் எடுக்கப்படுகிறது.

ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்ய ரூ.30ஆயிரம் வரை செலவாகும் நிலையில் பருத்தி அறுவடைக்குப் பின் ஒரு ஏக்கருக்கு ரூ.1 ஒரு லட்சம் வரை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7000 விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.7400 வரை விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருத்தி சாகுபடி செய்யப்பட்ட பெரும்பாலான இடங்களில் பருத்தி நல்ல மகசூலை தந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தேவையான நேரங்களில் கோடை மழை பெய்ததால் இந்தாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு பருத்தி சாகுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி பயிரிட்ட நிலையில் இந்த ஆண்டு குறைவாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சுமார் 50 சதவீதத்திற்கு மேல் பருத்தி எடுக்கும் பணிகள் முடிவடைந்து விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். பருத்தி கொள்முதல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிய வருவதாகவும் அப்படி விலை உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் எனவும் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்