ஊழல் முறைகேடு நிறைந்தது எடப்பாடி ஆட்சி தான்: அதிமுகவுக்கு முடிவு கட்டி விடுவார், அடித்து சொல்கிறார் டிடிவி

காரைக்குடி: தமிழ்நாட்டில் மிக மோசமான ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியாக எடப்பாடி ஆட்சிதான் இருந்தது, அதிமுகவுக்கு அவர் முடிவு கட்டிவிடுவார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் மது ஒழிப்பு கொள்கையில் ஆரம்ப காலம் முதல் தீவிரமாக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக குழம்பி போய் உள்ளார் என நினைக்கிறேன்.

அதனால் தான் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வருகிறது. அதனை அட்மின் போட்டதாக கூறுகிறார். அவர் ஏதோ குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது. படிப்படியாக மது ஒழிப்பு என்பது சாத்தியம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் கட்சிகள் இணையும். மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சிதான் தமிழ்நாட்டில் மிக மோசமான ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியாக கமிஷன் மண்டி போல், டெண்டர் ஆட்சியாக இருந்தது.

எம்ஜிஆர் துவங்கிய கட்சி, ஜெயலலிதா கட்டி காத்த கட்சி இன்று பழனிசாமி கையில் சிக்கிக் கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள், பழனிசாமி உடன் இருப்பவர்கள், ‘இரட்டை இலை உள்ளது. இது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கட்சி’ என தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளாமல், அங்குள்ள நிர்வாகிகள் இதற்கு ஒரு முடிவு கட்டாத வரை, 2026 தேர்தலுக்கு பிறகு பழனிசாமியே அதிமுகவுக்கு முடிவு கட்டி விடுவார். பழனிசாமி என்ற சுயநல மனிதர் இருக்கும் வரை அதிமுக ஒன்று சேராது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘சீமான் தரம் தாழ்ந்து பேசக்கூடாது’
டிடிவி.தினகரன் கூறுகையில், ‘சீமான் நல்ல பேச்சாளர். நல்ல கருத்துக்களை சொல்லக் கூடியவர். எதிர்மறையான கருத்துக்களை சொன்னால் தான் சமூக வலைத்தளங்களில் பரவும். மக்களை போய் சேரும் என்பதற்காக தரம் தாழ்ந்து பேசுகிறார். மறைந்த தலைவர்கள் குறித்து, மற்றவர்கள் குறித்தும், காவல்துறையினர் குறித்தும் ஒரு வீரராக தன்னை காட்டி கொள்வதற்காக பேசி வருகிறார்.

ஏற்கனவே சாட்டை துரைமுருகனை, நீதிமன்றம் உங்கள் விளம்பரத்துக்காக வருமானத்துக்காக பேசுவதாக தெரிவித்தது. அதுபோல் பேச மாட்டேன் என அவர் எழுதி கொடுத்துள்ளார். சீமான் மக்களுக்காக போராடுகிறார். ஆனால் மற்றவர்களை பேசும்போது யோசிக்காமல், அவர் பேசுவது வருந்தத்தக்கது’ என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு