பாஜகவில் இணைந்த 23 பேரின் ஊழல் வழக்கு முடித்துவைப்பு: விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாடியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த புலனாய்வு அறிக்கையை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. அதில்; 10 ஆண்டு கால மோடி ஆட்சியில், ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜகவில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 6 அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்ந்துள்ளனர். ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். தேசியவாத காங்., சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து 3 பேரும் கட்சி மாறியுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2 பேரும், சமாஜ்வாதி, ஜெகன்மோகன் கட்சியில் இருந்து தலா ஒருவரும் விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜகவுடன் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட்டேல் உள்ளிட்ட 12 பேர் மராட்டியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் மால்லிகார்ஜுன கார்கே; விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தவர்கள் பாஜகவில் இணைந்தால் மோடி வாஷிங் மிஷின் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறார்கள். சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. நரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் செயல், ஜனநாயகத்துக்கு சாபமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்