ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மீனவர்கள் தர்ணா போராட்டம்

செங்கல்பட்டு: எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரின் கணவர்கள் ஊழல் செய்திருப்பதாக கூறி செங்கல்பட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையை செய்யாமல் வேலை செய்ததாக பொய் கணக்கு காட்டியும், ரூ.11 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததிலும் ஊழல் நடந்ததாக அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர்.

கொக்கிலமேடு மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நடராஜன் மற்றும் துணை தலைவரின் கணவர் வெங்கடேசன் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாமல்லபுரம் காவல் நிலையம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே நேரில் புகார் கொடுத்துள்ளனர். தமிழக ஆளுநர், முதலமைச்சர் தனி பிரிவு, தமிழக எதிர்கட்சி தலைவர்க்கும் இ-மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் துணை தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சார் – ஆட்சியர் அலுவலகத்தில் கொக்கிலிமேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் தரப்பினர் மற்றும் மீனவர்களிடம் சப்-கலெக்டர் நாராயண சர்மா பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டாத நிலையில் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய மீனவ மக்கள், தலைவர் மற்றும் துணை தலைவர் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு