ஊழல் வழக்கில் பறிமுதலான சொத்துகளை ஆதாரங்கள் மூலம் நிரூபித்தால் வாரிசுகள் உரிமை கோர முடியும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்துவிட்டால், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மீதான உரிமையை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே அவற்றிற்கு வாரிசுகள் உரிமை கோர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்த தன்ராஜ், அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை டிசம்பர் 2020ல் கைது செய்தது. சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருவாரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 மே மாதம் தன்ராஜ் இறந்தார்.

ரெய்டின்போது பறிமுதல் செய்த பணம், நகைகளை கேட்டுஅவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிப்பிரியா ஆகியோர் திருவாரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருவாரூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், தன்ராஜ் மரணமடைந்ததை அடுத்து அவர் மீதான குற்ற நடவடிக்கை கைவிடப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வாரிசுகளான தங்களிடம் கொடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதற்கு லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பறிமுதல் செய்யப்பட்டவை சட்டவிரோத பணம் தான். தன்ராஜ் உயிரோடு இருக்கும்போது மனுதாரர்கள் பணத்தை திருப்பி கேட்கவில்லை. மரணமடைந்த தன்ராஜோ, அவரது வாரிசுகளோ பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. தன்ராஜ் இறந்துவிட்டதால் குற்றச்செயல் மறையவில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், குற்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்தை திருப்பி கேட்பதை உரிமையாக கோர முடியாது. அந்த சொத்தின் மீதான உரிமையை ஆதாரத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே திரும்ப கேட்க முடியும் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை