கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் வரி சலுகையா? பாஜ ஆட்சி 5 ஆண்டு நீடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்: பாலகிருஷ்ணன் பேட்டி

கடலூர்: பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடலூரில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய தேசிய நலனை முன்னிறுத்துவதற்கு மாறாக, முழுக்க, முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிக்கக்கூடிய நிதிநிலை அறிக்கையாக மாறியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களை புறக்கணித்துள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொத்து வரி போட வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிற இந்த வேளையில், அவர்களுக்கு வரி சலுகை அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 1ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகியவை சேர்ந்து ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு மாதம் கூட சரியாக முடியவில்லை. அதற்குள் இந்த ஆட்சியின் சாயம் வெளுத்துள்ளது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி நியமனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்..!!

மண்டபம் அருகே 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது