கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தவை: சென்னையில் இருந்து மீண்டும் சிங்கப்பூருக்கு விமான சேவை

மீனம்பாக்கம்: கொரோனா வைரஸ் காரணமாக சென்னை-சிங்கப்பூர்-சென்னை இடையே நிறுத்தப்பட்டிருந்த விமானம் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் சேவையை தொடங்கியுள்ளது. சிங்கப்பூர் சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதாலும், அங்கிருந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதுவரை சென்னை- சிங்கப்பூருக்கும், சிங்கப்பூர்- சென்னைக்கும் 6 விமானங்கள் என நாளொன்றுக்கு 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து, கூடுதலாக சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே, விமான சேவைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து 158 பயணிகளுடன் புறப்பட்டு, நள்ளிரவு 11.50 மணிக்கு, சென்னை வந்தது. அதே விமானம் சென்னையில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு 131 பயணிகளுடன் சிங்கப்பூர் செல்ல வேண்டியது, தாமதமாக இன்று அதிகாலை 1.42 மணிக்கு புறப்பட்டது. இது தினசரி விமானங்களாக இயக்கப்படுகிறது. இதனால் சென்னை-சிங்கப்பூர்-சென்னை இடையே, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 14 ஆக அதிகரித்துள்ளது.

இப்போது புதிதாக சென்னைக்கு விமான சேவையை தொடங்கியுள்ள ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஏற்கனவே சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு இந்த விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கி நடத்தியது. ஆனால் சென்னைக்கு மட்டும் தொடங்காமல் இருந்தது. இப்போது மூன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சிங்கப்பூர்- சென்னை- சிங்கப்பூர்- இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது. இது விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு