கொரோனா காலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் எடப்பாடியும், தங்கமணியும் மது வியாபாரம் செய்தனர்: ஓபிஎஸ் அணி கடும் தாக்கு

சேலம்: கொரோனா காலக்கட்டத்தில் எடப்பாடியும், தங்கமணியும் சேர்ந்து டாஸ்மாக் மதுபான விலையை 2 முறை உயர்த்தி, போலீஸ் பாதுகாப்போடு வியாபாரத்தில் ஈடுபட்டனர்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி ஆட்டம் போடுகிறார்.

கள்ளச்சாராயம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை. கொரோனா காலக்கட்டத்தில் எடப்பாடியும், தங்கமணியும் சேர்ந்து டாஸ்மாக் மதுபான விலையை 2 முறை உயர்த்தி, போலீஸ் பாதுகாப்போடு வியாபாரத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு மதுபான கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசை குறை சொல்லும் அளவுக்கு ஊழல்வாதியான எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதை, எப்படி அனுமதிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. கொடநாடு வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கில் அவர் சிறைக்கு சென்றால் புத்தி வந்துவிடும்.

எடப்பாடி பழனிசாமி தனது பெயரில் எந்த சொத்தும் இல்லை என்கிறார். அவர் பெயரில் இல்லை. ஆனால்,உறவினர்கள் பெயரில் வாங்கி குவித்து வைத்திருக்கிறார். அதனால், எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உறவினர்கள் பெயரில் உள்ள சொத்துகள் பற்றியும் விசாரிக்க வேண்டும். எல்லாத்துக்கும் தர்மயுத்தம் நடத்துவதாக ஓபிஎஸ் பற்றி விமர்சனம் செய்துள்ளார். ஆம், உரிமைக்காகவும், நீதிக்காகவும் எடப்பாடிக்கு எதிராக தொடர்ந்து தர்மயுத்தம் நடத்தத்தான் செய்வோம்.
இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்