கூட்டுறவு வங்கியில் ரூ.2 கோடி மோசடி: மேலாளர் கைது

கூடலூர்: குமுளி கூட்டுறவு வங்கியில் ரூ.2 கோடி மோசடி செய்தது தொடர்பாக, வங்கி மேலாளரை, கேரள குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தை தலைமையிடமாகக் கொண்டு, இடுக்கி டீலர்ஸ் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் கட்டப்பனை, அடிமாலி மற்றும் தமிழக எல்லையோரம் உள்ள குமுளியிலும் உள்ளன. குமுளி கிளை மேலாளராக, கடந்த 2021 முதல் அதே ஊரைச் சேர்ந்த வைஷாக் மோகன் (38) என்பவர் இருந்தார். இவர், தனது உறவினர்கள், நண்பர்களுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் கடன் கொடுத்துள்ளார். மேலும், டெபாசிட் பணத்திலும் மோசடி செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் குமுளி வங்கிக் கிளையில் நிர்வாகக் குழு ஆய்வு நடத்தியது.

அப்போது வைஷாக் மோகன் செய்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து வங்கி உயரதிகாரிகள், குமுளி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து வைஷாக் மோகன் தலைமறைவானார். கடந்த 2 மாதங்களாக அவரை தேடி வந்த குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். நேற்று வைஷாக் மோகனை குமுளி கூட்டுறவு வங்கிக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், குமுளி கிளையில் ரூ.1.49 கோடியும், கட்டப்பனை கிளையில் ரூ.50 லட்சமும் வைஷாக் மோகன் மோசடி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

தஞ்சை பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல்

பணம் தரும் பருத்தி!

பஞ்சாப்பில் இப்படியொரு ஆச்சரியம்; திருட்டு தொழிலிலும் ஒரு நேர்மை வேணும்: ஆவணங்களை தபாலில் அனுப்பி வைத்த திருடன்