கூட்டுறவு கடன் சங்க நிதியில் ரூ.3.52 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: கூட்டுறவு கடன் சங்க நிதியின் மூலம் கட்டப்பட்ட ரூ.3.52 கோடியில் புதிய திருமண மண்டபத்தை தலைமை செயலாளத்திலிருந்து காணொளி காட்சி மூலம் முலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்க நிதியின் மூலம் மறைமலைநகர் பகுதியில் 6,300 சதுரடி காலியிடத்தில் 16,000 சதுரஅடி அளவில் 3 தளங்களுடன் கூடிய திருமண மண்டபம் சங்கத்தின் சொந்த நிதி மூலம் ரூ.3 கோடியே 52 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த, திருமண மண்டப கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, இந்த திருமண மண்டபத்தினை காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் கலெக்டர் ஆர்.ராகுல்நாத் நேற்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த மண்டபம் தரைதளம், சமையல் அறை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் உள்ளது. முதல் தளம் உணவருந்தக்கூடிய வசதியுடன் உள்ளது. இரண்டாவது தளம், குளிர்சாதன வசதியுடன் கூடிய விழா மண்டபம் ஆகும். மூன்றாவது தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 8 தங்கும் அறைகள் உள்ளன.

இந்த திருமண கூடம், 350 நபர்கள் அமர்ந்து விழாவினை காணும் வசதியுடனும், திருமண மேடையில் 50 நபர்கள் அமரும் வசதியுடனும் உள்ளது. மணமகன் அறை மற்றும் மணமகள் அறை குளிர்சாதன வசதி மற்றும் குளியலறையுடன் இணைந்துள்ளது. ஒரே நேரத்தில் 200 நபர்கள் உணவருந்தும் வசதியுடன் உள்ளது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் முருகன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி, மறைமலை நகர் மன்ற தலைவர் சண்முகம், மறைமலை நகர்மன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை