குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகள் குதூகலம்

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
நீலகிரி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு நிலவும் மிதமான சீதோஷன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக மே மாத கோடை சீசனில் மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

அதற்கேற்ப கோடை விழா நிகழ்ச்சிக்கு தேதிகளும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளன. மே மாதத்தில் நடைபெறும் கோடை சீசனை மகிழ்விக்கும் பொருட்டு மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் தயாராகி வருகின்றன. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக மே மாதம் 27, 28ம் தேதிகளில் 63வது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பூங்கா முழுவதும் சுமார் 2.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரிய வகை பச்சை ரோஜா நாற்றுகள் வளர்க்கப்பட்டு பூங்காவின் பல்வேறு இடங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிம்ஸ் பூங்காவில் மாடங்களில் அலங்கரிப்பதற்காக சுமார் 5 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகை மலர் நாற்றுகள் நர்சரியில் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவை தாயகமாக கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விதைகள் வரவழைக்கப்பட்டு சுமார் 1000 தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட செலோசியா நாற்றுகளில் சிவப்பு, ஆரஞ்சு, அடர் சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் மலர்கள் பூங்காவில் அலங்கரிக்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல பூங்காவில் வளர்க்கப்படும் ஆர்க்கிட் மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. இங்கு தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ள சிம்பிடியம் மற்றும் பயர் ஸ்டார் வகை ஆர்கிட் மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு