குன்னூர் வழியாக செல்லும் மலை ரயில் பாதையில் காட்டு யானைகள் சாணத்தில் பிளாஸ்டிக்

*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

ஊட்டி : குன்னூர் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் மலை ரயில் பாதையில் காட்டு யானைகள் சாணத்தில் (லத்தி) பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருப்பது சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதைக்கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் – குன்னூர் – ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை உள்ள மலைரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கணிசமாக உள்ளன. ரயிலில் பயணிக்கும் போது யானைகளை காணமுடியும். இந்த யானைகள் குடிநீர் தேடி தண்டவாளத்தில் உலா வருகின்றன. இப்பகுதியில் உலா வரும் காட்டு யானைகளின் சாணங்களில் (லத்தி) பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை உணவு கழிவுகளுடன் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்‌. அவற்றால் கவரப்படும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவற்றை பிளாஸ்டிக்குடன் சாப்பிடுகின்றன. தற்போது மலை ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் யானைகளின் சாணங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தென்பட்டுள்ளது‌.

எனவே, இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப்பாளையத்தில் மலை ரயிலில் ஏறும் போதே நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் எடுத்து வராத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்