கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது? : ஐகோர்ட் கேள்வி

மதுரை : கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கூல் லிப், குட்கா விற்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் , பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. .இத்தகைய போதைப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதை பொருட்கள் பயன்பாடே காரணம்.கூல் லிப் போதைப்பொருளுக்கு மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. இதனால் இளம் தலைமுறை சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருகிறது.

குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? போதைப்பொருள் விற்றால் கைது செய்யப்படுகிறார்கள், பிறகு ஜாமினில் வெளியே வந்து விடுகிறார்கள். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைகளை செய்வது போன்ற எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என முடிவு செய்ய வேண்டும். ஆகவே கூல் லிப்-ஐ பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 20ம் தேதி மீண்டும் இந்த விவகாரத்தை ஒத்திவைத்தார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி