திருட்டு மற்றும் முறைகேட்டை தவிர்க்க கியூஆர் பார்கோடுடன் சமையல் கேஸ் சிலிண்டர்கள்: எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை

வேலூர்: நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் உபயோகிப்பாளர்கள் 31 கோடி பேர். இவர்களில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றவர்கள் 9.6 கோடி பேர். தமிழகத்தில் 2.33 கோடி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். ஏற்கனவே, சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள், குளறுபடிகளை களைய ஆதார் எண், தொலைபேசி எண் பதிவு, ஆன்லைன் முன்பதிவு நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சமையல் காஸ் நுகர்வோரின் விரல் ரேகை மற்றும் கருவிழி படலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதன் அடுத்தக்கட்டமாக சிலிண்டர்களை கியூஆர் பார் கோடுடன் வழங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கான அறிவிப்பும் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கியூ ஆர் பார்கோட்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே இனி உங்களால் வீட்டு உபயோக சிலிண்டரை வாங்க இயலும். இது சிலிண்டர் திருடுபவர்களை கண்டுபிடிக்க மற்றும் சிலிண்டர் திருட்டை தடுக்க உறுதுணையாக இருக்கும்.அது மட்டுமல்லாமல் கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவோரையும் இந்த சிலிண்டர்களில் உள்ள கியூ ஆர் பார்கோட்டை ஸ்கேன் செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பயன்படும். இதன் காரணமாக வீடுகளுக்கு இனி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. வாடிக்கையாளரின் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை காஸ் சிலிண்டர் வாங்கும் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்ததன் மூலம் மட்டுமே உங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர் கிடைக்கும் என்று சமையல் காஸ் வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்