குக்கர் தலைவரின் மெகா பிளானுக்கு தடை போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பலாப்பழக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘சட்டமன்ற தேர்தலுக்கு காய் நகர்த்தும் குக்கர்காரரின் எண்ணத்திற்கு பலாபழக்காரர் தடை போட்டு வருகிறதா சொல்றாங்களே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘2026 சட்டமன்ற தேர்தலில் ஹனிபீ மாவட்டத்தில் மூன்றில் ஒரு தொகுதியில் குக்கர் தலைவர் போட்டி போட முடிவு செஞ்சிருக்காராம்.. கடந்த எம்பி தேர்தலில் ஹனிபீ தொகுதியில் மலராத கட்சி மற்றும் பலாப்பழக்காரர் தயவில் போட்டியிட்ட குக்கர் தலைவர், 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிட்டாரு.. ஆனாலும், 2 எம்எல்ஏ தொகுதிகளில் கொஞ்சம் வாக்கு கிடைச்சுதாம்.. இதனால்தான் இந்த அதிரடி பிளானாம்.. இதனால ஹனிபீ நகரில் வாடகைக்கு வீடு பிடித்து, கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறாராம்.. இவர் தங்கியிருக்கிற வீட்டுக்கு அருகே ரெண்டெழுத்து தொகுதி உள்ளது..

இந்த தொகுதி எம்எல்ஏவாக பலாப்பழக்காரர் இருக்கிறார்.. இவர் கடந்த எம்பி தேர்தலில் கடலோர தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.. இதனால் ரெண்டெழுத்து தொகுதி மக்கள், இவர் மீது கோபமாக இருக்கிறார்களாம்.. இதனை கவனித்த குக்கர் தலைவர், ரெண்டெழுத்து தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளராம்… இதுதொடர்பாக கூட்டணியில் உள்ள தாமரை கட்சி மேலிடத்தில் பேசி வருகிறாராம்.. இதனையறித்த பலாப்பழக்காரர், தனக்கு நெருக்கமான தாமரைக்கட்சி தலைவர்களை சந்தித்து, குக்கரின் எண்ணத்துக்கு தடை போட்டு வருகிறாராம்… ரெண்டெழுத்து தொகுதியில் நடக்கும் இந்த மல்லுக்கட்டை இரு தரப்பு ஆதரவாளர்களுமே கலாய்த்து வருவதுதான் உச்சக்கட்ட காமெடி..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘‘வைத்தியானவர் இணைந்தால் ஓரங்கட்டப்படுவோம் என்ற அச்சத்தில் இலை கட்சி நிர்வாகிகள் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நெற்களஞ்சிய மாஜி அமைச்சரான தேனிக்காரர் அணியை சேர்ந்த வைத்தியானவர், இலை கட்சியினர் மீண்டும் இணைந்து விடுவார்கள்னு சமீபத்தில் தெரிவித்து இருந்தாரு.. இது, டெல்டாவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வைத்தியானவர் இலை கட்சியில் இணைந்து விட்டால், ஓரங்கட்ட படுவோம் என்ற அச்சத்தில் நிர்வாகிகள் இருக்காங்களாம்.. தொடர்ந்து, தங்களின் ஆதங்கத்தை தலைமையிடம் முக்கிய நிர்வாகிகள் தெரிவிச்சிட்டு வர்றாங்களாம்.. அதற்கு தலைமை பெரிதாக ரியாக்‌ஷன் காட்டவில்லையாம்… வைத்தியானவர் மீண்டும் இலை கட்சியில் சேர்ந்து விடக்கூடாது என்பதில், டெல்டாவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக இருக்காங்களாம்.. இதற்கான வேலைகளும் திரைமறைவில் தீவிரமாக நடந்து வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எல்லாருக்கும் எல் கொடுத்து ஆப் செய்யும் அதிகாரி மீண்டும் அதே ஆட்டத்தை தொடங்கிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி ஊராட்சி ஒன்றியத்துல பெயர்லயே அரசை வெச்சிருக்குற ஒரு அதிகாரி பணிபுரிஞ்சு வர்றாரு.. இவரு ஊர் ஆட்சி, பிரசிடெண்ட், செக்ரட்ரிகள்னு எல்லாரோட சிக்னேச்சர்களை பயன்படுத்தி, போலி பில் போட்டு பணத்தை டிரான்ஸ்பர் செஞ்சிருக்குறதாக புகார் சொல்றாங்க.. இந்த புகார்கள் எல்லாம் மாவட்ட நிர்வாகத்துக்கு போனாலும், அவங்களுக்கும் எல் கொடுத்து ஆப் செஞ்சிடுறாராம்.. இருந்தாலும் ஆடிட்டிங் டீமுக்கு தகவல் போனதால, டிஜிட்டல் சிக்னேச்சர் விஷயத்துல, கையும் களவுமாக சிக்கிட்டாராம்..

அந்த அதிகாரி, கடுமையாக எச்சரித்து, நடவடிக்கை எடுக்குறதா சொன்னதால அந்த டீமுக்கும் எல் கொடுத்து ஆப் செஞ்சி, நான் செஞ்சது தப்புதான் இனிமே இப்படி செய்ய மாட்டேன்னு சொல்லியிருக்காராம்.. அதோட ஒரு மாவட்ட அதிகாரி சிபாரிசால, விஷயத்தை சரி கட்டினாராம்.. சில மாதங்கள் அமைதி காத்த அந்த அதிகாரி, இப்ப மீண்டும் அதே ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்காராம்.. எல் கொடுத்து சரி கட்டுனது போக, இப்ப நல்ல வருமானம் பார்க்க ஆரம்பிச்சிட்டாராம்.. உறவினர்கள் பெயர்ல சொத்துகளை வாங்கி குவிச்சு வர்றாராம்.. இந்த விஷயம் எப்ப ெவளிச்சத்துக்கு வரப்போகுதோ தெரியலையேன்னு அந்த ஒன்றியத்துல பரபரப்பாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மணல் கொள்ளையர்களிடம் செம வசூல் நடத்தும் காக்கி அதிகாரி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடல் மாவட்ட கோவிலில் முடியும் ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெல் அதிகாரிக்கு பல வகையிலும் பணம் வந்து பையை நிரப்புவதை நிலைய போலீசார் குமுறலாக இருந்து வருகின்றனர்களாம். காவல் நிலையத்தில் நிலைய அதிகாரி கடந்த சில மாதங்களாகவே கிடையாதாம். மேற்கே அணைகரையில் இருந்து கிழக்கே சித்தமல்லி வரை நீண்ட கொள்ளிடம் பகுதி காவல் நிலையத்துக்கு உட்பட்டது. இங்கு மணல் குவாரியே கிடையாது. இதனால் மாட்டுவண்டி மற்றும் சிறிய டிராக்டரில் மணல் கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதை பயன்படுத்தி பெல் அதிகாரி, கடத்தல் மணல் கொள்ளையர்களிடம் செம வசூலில் ஈடுபட்டு வருகிறாராம். மாவட்ட எஸ்பிக்கு கூட தெரியாத அளவில் உள்ளூர் தனிபிரிவு அதிகாரியை கையில் வைத்து கொண்டு தினமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறாராம். இதுபோக ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனுக்கள் வந்தால் பெல் அதிகாரிக்கு கொண்டாட்டம் தான். புகார் கொடுத்தவரின் எதிர்தரப்பிலும் காசு வாங்கி கொண்டு வழக்கு பதியாமல் அலைகழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாராம். இதனால் பெல் அதிகாரி, தினமும் லகர அளவில் வசூல் கொட்டோ கொட்டு கொட்டுவதை நிலைய போலீசார் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

பள்ளியில் மாணவனுக்கு பிளேடு வெட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்

மாணவிக்கு வளைகாப்பு ஆசிரியை சஸ்பெண்ட் தலைமையாசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்