குக்கர், தேனிக்காரர் நிர்வாகிகளை ரகசியமாக இழுக்கும் பணி நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பில் கலெக்டர் கரன்சியை கொடுத்து மீண்டும் பணிக்கு சேர பெண் அதிகாரி செய்த தில்லாலங்கடி வேலை தான் காரணமாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பணிபுரியும் மூன்றெழுத்து பெயர் கொண்ட வரி வசூலர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளானதால், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். பத்து நாட்கள்கூட ஆகாத நிலையில் அந்த வரி வசூலர், மாநகராட்சி ஆணையரின் உத்தரவை மீறி மீண்டும் பணி பட்டியலுக்கு வந்துவிட்டார். அதாவது, தெற்கு மண்டலத்தில் உள்ள 100வது வார்டில் அதே வரி வசூலராக பணியமர்த்தப்பட்டு இருக்கிறாரு.. இவருக்கு, மூன்றெழுத்து பெயர் கொண்ட பெண் உதவி கமிஷனர் ஒருவர் உதவி செஞ்சிருக்காரு.. இவர், அதற்கான கோப்புகளை தயாரித்து, பிற கோப்புகளுடன் இணைத்து, பத்தோடு ஒன்று பதினொன்றாக மாநகராட்சி ஆணையரிடம் கையெழுத்தும் வாங்கிவிட்டாராம்.. இந்த தில்லாலங்கடி வேலை செய்வதற்காக, இந்த பெண் அதிகாரி பெருமளவில் கரன்சியும் பெற்றுக்கொண்டாராம்..

இதோடு இல்லாம இந்த பெண் அதிகாரி, தனது வீட்டு வேலை செய்வதற்காக ஒரு ஊழியரை கைக்குள் வைத்துக்கொண்டு, முழு நேரமும் வேலை வாங்கி வருகிறாராம்.. கிழக்கு மண்டலத்தில் கொடி கட்டி பறக்கும் இந்த பெண் அதிகாரியையும், மீண்டும் ரெகுலர் பணிக்கு நுழைந்துள்ள மூன்றெழுத்து பெயர் கொண்ட பில் கலெக்டரையும் யாரும் அசைக்க முடியாதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்டாவுக்கு சேலத்துக்காரர் போயிட்டு வந்த பிறகு குக்கர், தேனிக்காரர் நிர்வாகிகளை இழுக்கும் பணி ரகசியமாக நடந்துட்டு இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெல்டாவில் நெற்களஞ்சியம், கடலோரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் சமீபத்தில் போயிருந்தார்.. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் முடிச்சிட்டு கட்சியில் உள்ள மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல ஆலோசனையில் ஈடுபட்டாராம்.. நாடாளுமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட 6 வேட்பாளர்கள் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டதாம்..

தொடர்ந்து, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கியிருக்கிறாரு.. இந்த ஆலோசனையின் போது நிர்வாகிகளுக்கு முக்கிய அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாம்… கடலோரம், மனுநீதி சோழன், நெற்களஞ்சியம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குக்கர் மற்றும் தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்கணும்.. ‘கரன்சி’ மட்டுமல்லாமல் கட்சியில் முக்கிய பொறுப்புகளும் அவர்களுக்கு வழங்கப்படும். காலதாமதப்படுத்தாமல் முடிக்கணும்.. இது எல்லாம் ரகசியமாகவும் நடக்கணும்னு சேலத்துக்காரர் அதிரடியா உத்தரவு போட்டாராம்… இதன் மூலம் குக்கர் கட்சியின் தலைமை மற்றும் தேனிக்காரருக்கு நெருக்கடி கொடுக்க அவர் முடிவு செய்திருக்கிறாரு.. சேலத்துக்காரரின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் பணிகள் தீவிரமாகவும், ரகசியமாக நடந்துட்டு வருதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆபிசே திறக்காம செம கலெக்ஷன் பார்க்கும் லேடி ஆபிசர்பற்றி சொல்லுங்க… எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல செய் என்று ெதாடங்கி ஆறு என்று முடியுற நகர் ஆட்சி இருக்குது.. இந்த ஆபிஸ்லயே சர்வேயர் டிபார்ட்மெண்ட்டும் இயங்கி வருது.. சில மாசத்துக்கு முன்னாடி அந்த ஆபிஸ்ல விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு நடத்துனாங்க.. அதுல லஞ்சம் வாங்குன சர்வேயர் கையும் களவுமாக சிக்கிட்டாரு.. அதுக்கு அப்புறமாக, வந்தா வாசி நகர் ஆட்சியில இருந்து ஒரு லேடி ஆபிசரை பொறுப்பு அதிகாரியாக நியமிச்சாங்க.. அவங்க அலுவலகத்தை திறக்குறதே இல்லையாம்.. அங்க இருக்குற புரோக்கர்ஸ் தான் சர்வேயராக மாறிட்டாங்களாம்.. அளவீடு செய்றதுக்கு, பெயர் மாற்றத்துக்குன்னு ரேட் பிக்ஸ் செஞ்சி 7 கே வரைக்கும் வாங்குறாங்களாம்.. நிலத்தின் அளவை பொறுத்து எல்லாத்துக்கும் ரேட் மாறுமாம்..

முன்னாடி வாங்கி சிக்குனவரு, 4கே தான் வாங்குவாராம்.. ஆனா இவங்க அவங்களையே மிஞ்சிட்டாங்களேன்னு, ஜனங்க, வாலு போய் கத்தி வந்த கதையாக, அவரே பரவாயில்லைன்னு புலம்பி வர்றாங்களாம்.. துறை சார்ந்த உயர் அதிகாரிங்க உடனே உரிய நடவடிக்கை எடுக்கணும்னு குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல்வேறு ஆலோசனை, முட்டுக்கட்டையால புல்லட்சாமிக்கு திருகு வலியாகுதாமே புதிய கவர்னரின் செயல்’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் ராதா, சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூட்டம் போடுகிறது, சரியான நேரத்துக்கு வராத அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு பிரச்னைகளில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறாரு… சமீபத்தில் அமைச்சரின் மகளிடத்தில் பல கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகளை தமிழக வனத்துறையினர் பறிமுதல் செய்தது பற்றியும், தேர்தல் தோல்விக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தியது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு சில ஆலோசனை வழங்கியிருக்கிறாரு..

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்ைத ரத்து செய்துவிட்டு பொதுமக்களை பாதிக்காத வகையில் மானியம் முறையில் மின் கட்டணத்தை அரசே கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கணும்னு யோசனை சொன்னாராம்… சந்தன கட்டைகள் பறிமுதல் வழக்கில் அரசுக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கணும்னு சொல்லிட்டு, புதிதாக ரெஸ்டோ பார் அனுமதி வழங்காமல் நிறுத்தி வைச்சுட்டாராம்.. மேலும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்னு அரசை வலியுறுத்தி இருக்கிறாரு.. மக்கள் நேரிடையா பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளை சரி செய்யும் புதிய கவர்னரின் அதிரடி நடவடிக்கையால் புல்லட் சாமிக்கு திருகுவலியா இருப்பதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வர்றாங்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

அதிமுக முன்னாள் எம்.பி. மரணம்

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு