Monday, July 1, 2024
Home » பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஜூன் 16ல் திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு..!!

பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஜூன் 16ல் திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் ஆளுநரை கண்டித்து திமுக உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்து காலதாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல்,

மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. – நிரூபன் சக்கரவர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும் போது, தமிழ்நாட்டில் உள்ள அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கலந்துக் கொள்வர். ஆனால், தமிழ்நாட்டு பா.ஜ.க.-வின் சிறப்புத் தலைவர் போல செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்களைத் தவிர்த்து, வட இந்திய சனாதன சித்தாந்தவாதிகளை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிட வேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார். இதனால், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் 9,29,142 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்காமல் தனது சட்டப்பூர்வமான கடமையை செய்யத் தவறியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்ற நாளிலிருந்து அவரது அலட்சியம் மற்றும் சனாதனப் போக்கினால், இதுநாள் வரையிலும் பல்கலைக் கழகங்களில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க முடியவில்லை. பட்டபடிப்பு சான்றிதழ் பெற முடியாததால், உயர்கல்வி பயிலவும் மற்றும் வேலைவாய்ப்பு பெறமுடியாமலும், ஆராய்ச்சி மேற்படிப்பு பயிலவும் முடியாமல் மாணவர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும், முனைவர் பட்டத்தை பெற்றவர்கள், தங்களது ஆய்வு அறிக்கையினை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில், தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்ற நிலையினை சிதைப்பதற்கும், அவர்களுடைய வேலைவாய்ப்பு, தொழில் முனைதல் உள்ளிட்ட முன்னேற்றத்தை சிதைப்பதற்கும், ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் தமிழ்நாட்டின் ஏஜெண்டாக உள்ள ஆளுநர் ரவி, உள்நோக்கத்துடன் செய்கின்ற மாபெரும் மாணவர் விரோத சதி திட்ட செயலலுக்கு மாணவர் சமுதாயமும், மக்களும் பெரும் கண்டன குரல் எழுப்புகின்றனர்.

மேலும், பல்கலைக்கழகங்களை சட்டப்பூர்வமாக அமைப்பது, நிர்வகிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதனடிப்படையில், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசின் உயர்கல்வித் துறையால், தேடல் குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், மாநில அரசின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் (சிண்டிகேட்) என மூவர் இடம் பெறுவர். ஆளுநரின் பிரதிநிதி தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார். தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரைத் ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறையின்படிதான் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால், ‘இந்திய அரசியல் சாசனத்தின்படி நடப்பேன்’ என்று உறுதிமொழி அளித்து பதவி ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், பல்கலைக் கழக மானியக்குழு தரப்பிலிருந்து ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார். மாநில அரசின் உரிமைக்கும், பல்கலைக்கழகத்தின் சுயாட்சி தன்மைக்கும் எதிராக, ஒன்றிய அரசின் முழு ஆளுகைக்கு பல்கலைக்கழகங்களை கொண்டு செல்ல ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்திருக்கும் ஒரு பெரும் சதி திட்டமாகவே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு இதை கருதுகிறது. இத்தகைய சட்டவிரோதமான ஒழுங்கீன போக்கினை வன்மையாக கண்டிக்கிறது. இதனால், கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல், பல்கலைக்கழக நிர்வாகம் முடங்கி, செயலற்றுப் போகும் நிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உருவாக்கி உள்ளார்.

இவ்வாறு, பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் தேவையற்ற காலத்தாமதம் செய்வதும், அதில் ஒன்றிய அரசின் தலையீட்டை வலிந்து திணிப்பதும், அவ்வாறு துணைவேந்தர்களை நியமித்தாலும் அவர்கள் சனாதன சித்தாந்தத்தை உடையவர்களாக தேர்ந்தெடுத்து நியமிப்பது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் செயல்படுவது, தமிழ்நாட்டின் கல்வி, சமூகநீதி, இருமொழிக் கொள்கை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றின் மீது நடத்தப்படும் கொடுந்தாக்குதலாகும்.

இவற்றையெல்லாம் முன்பே உணர்ந்த, தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். ஆனால், அந்த மசோதாகளுக்கு இதுநாள் வரையிலும் தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என். ரவி, இதுவரையில் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்து தனது வன்மத்தை இக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமைத் தவறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டித்தும், உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வலியுறுத்தியும், ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு விளம்பரத் தூதுவராகச் செயல்படுவதுடன், தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில் அரசியல் சட்டவிதிகளுக்கு முரணாக, அத்துமீறி செயல்பட்டு வருவதன் மூலம் ஒழுங்கின்மை போக்கினை கடைபிடித்து வரும் தமிழ்நாடு பா.ஜ.க.-வின் சிறப்புத் தலைவரைப் போல செயல்படும், ஆளுநர் ஆர்.என். ரவி கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை உடனே ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும் வரும் 16ம் தேதியன்று காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள், முற்போக்கு சிந்தனையுடைய மாணவர், இளைஞர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

20 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi