சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்!!

திருப்பூர்: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையை முடித்துக் கொண்டு நாளை மகாவிஷ்ணுவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்காக கடந்த செப்.7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை, சென்னை சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மனு மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தது. இந்த மனு மீது விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்டார்.

நான்காவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் முன்பு மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதனை அடுத்து நேற்று விசாரணைக்கு சைதாப்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூரில் உள்ள மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விசாரணையை முடித்துக் கொண்டு நாளை மகாவிஷ்ணுவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர். மகாவிஷ்ணுவிடம் விசாரணையை ஒட்டி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலக பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

Related posts

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 30 ஆன்மிக பயணிகள் விமானம், ரயிலில் சென்னை திரும்பினர்: பயணிகளை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள்

கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மாநில அரசுகளுக்கு அனைத்து அதிகாரம்: சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், திமுக பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி