பணிகளை குறித்த காலத்தில் முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை: மண்டலக்குழு கூட்டத்தில் எச்சரிக்கை

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலக்குழு கூட்டம், தலைவர் நந்தகோபால் தலைமையில் நேற்று நடந்தது. மண்டல உதவி ஆணையர் சின்னதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மக்கள் நலப் பணிகள் குறித்த தீர்மானங்கள் மீது கவுன்சிலர்களிடையே விவாதம் நடந்தது. இதில் 27வது வார்டு கவுன்சிலர் சந்திரன் பேசுகையில், ‘‘எனது வார்டில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வரவேண்டும்’’ என்றார். 24வது வார்டு அதிமுக கவுன்சிலர் சேட்டு பேசுகையில், ‘‘மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சரியாக குப்பையை அகற்றுவதில்லை. வருவாய் பிரிவு அதிகாரிகள் தனியார் வணிக கட்டிடங்களுக்கு முறையாக வரி விதிக்காமல் குறைவாக மதிப்பீடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். அதிமுக கவுன்சிலர் என்பதால் எனது வார்டில் பணிகள் நடைபெறவில்லை’’ என குற்றம் சாட்டினார்.

இதற்கு தலைவர் நந்தகோபால் பதில் அளித்து பேசுகையில், ‘‘வணிக கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும். ஒப்பந்தம் எடுத்து பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 24வது வார்டு உள்பட அனைத்து வார்டிலும் கட்சி பாகுபாடு இல்லாமல் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன’’ என்றார்.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை