ஒப்பந்ததாரர்களின் அலட்சியப் போக்கால் வடிநீர் கால்வாயில் அத்துமீறி விடப்படும் கழிவு நீர்

* முழுமைபெறாத நிலையில் பொதுமக்கள் அவதி, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அம்பத்தூர்: வடிநீர் கால்வாயில் அத்துமீறி விடப்படும் கழிவு நீர் குறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மழை நீர் வடிகால் கால்வாய் திட்டம் உலக வங்கியிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெருக்களிலும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு நிருபர்கள் சந்திப்பில் 95 விழுக்காடு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் டிசம்பர் மாதம் மழைக்காலத்தில் தி. நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அப்போது மழை வெள்ளத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் பல்வேறு கட்டங்களில் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முறையாக விசாரணை செய்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதன் ஒரு கட்டமாக மழை நீர் வடிகால் கால்வாய் திட்டத்தின் தலைமை பொறியாளர் நந்தகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விளை நிலங்களில் விவசாயி வரப்பு வெட்டினால் மழை நீர் தேங்கி நிற்காமல் ஒவ்வொரு நிலங்களாக கடந்து சென்று கொண்டே இருக்கும். ஆனால் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் அப்படி ஒரு தொழில் நுட்பமான திட்டமாக தெரியவில்லை. எல்லா இடங்களிலும் சரிசமமாக ஒரே மாதிரியாக பள்ளம் தோண்டப்பட்டு மழை நீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டது.

மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் சென்னை மாநகராட்சி துறை சார்ந்த பொறியாளர்கள் முறையாக ஆய்வு செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. கால்வாய் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் நிறைவான தொழில்நுட்பம் கொண்ட பொறியாளர்களை வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. பள்ளம் தோண்டுவதற்கு அவர்களுடைய அளவுகோலாக ஒரு குச்சியை கொடுத்து விடுகின்றனர். அந்த குச்சியை வைத்து எல்லா தெருகளிலும் ஒரே மாதிரியாக பள்ளம் தோன்றுகின்றனர்.

எல்லா வீட்டு வாசல் வழியாகவும் மழைநீர் வடிகால் கால்வாய் செல்வதால் எந்தெந்த வீடுகளில் கழிவுநீர் இணைப்பு பெறவில்லையோ அவர்கள் எல்லாம் ரூ.500, 1000 என்று ஒப்பந்த பணியாளர்களிடம் பணத்தை கொடுத்து விட்டால் அவர்களுடைய கழிவுநீர் இணைப்பை எல்லாம் கொண்டுவந்து மழை நீர் வடிகால் கால்வாயில் இணைத்து விடுபவர். இது மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொரு தெருவாக சென்று மழையின் வடிகால் கால்வாயில் மூடியை திறந்து எந்தெந்த இடங்களில் கழிவுநீர் வருகிறது என ஆய்வு செய்து அந்தந்த தெருகளில் திருட்டுத்தனமாக கொடுக்கப்பட்ட கழிவுநீர் இணைப்பை துண்டித்து வருகின்றனர்.

புவியியல் சார்ந்து ஆய்வு செய்து எந்தெந்த தெருக்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது, எந்தெந்த தெருக்களில் மழை நீர் தேங்கவில்லை என கண்டறியப்படவில்லை. அதேபோல் எந்தெந்த தெருக்கள் மேடான பகுதியாக உள்ளது. எந்தெந்த தெருக்கள் தாழ்வான பகுதியாக உள்ளது. மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அமைக்காமல் மேடான தெருக்கள், பள்ளமான தெருக்கள், மழை நீர் தேங்காத தெருக்கள், என அனைத்து தெருக்களிலும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு மழை நீர் வடிகால் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பல தெருக்களில் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் எங்களுக்கு வேண்டாம் என அந்தந்த தெரு குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்ததன் பேரில் ஒரு சில தெருக்கள் விடப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் என்ற பெயரில் நன்றாக இருக்கும் நீர்நிலைகளை எல்லாம் கழிவுநீராக மாற்றி விட்டது. சென்னை மாநகராட்சி‌. மழைநீர் வடிகால் கால்வாய் மூலமாக கழிவுநீரை எல்லாம் ஏரி, குளம், குட்டைகளை சென்றடைவதால் நன்றாக இருந்த இந்த நீர் நிலைகளெல்லாம் மாசடைந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது.

மேலும் அந்தந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துவிட்டது. சென்னை கழிவு நீரேற்ற வாரியம் ஒழுங்கான முறையில் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து எல்லா வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பை சரியான முறையில் கொடுத்திருந்தால் தெருக்களில் மழைநீர் வடிகால் கால்வாய் கழிவுநீர் செல்வதற்கு வாய்ப்பு இல்லை. மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் எப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும் பயன்படுகிறதோ அப்போதுதான் அது மக்களுக்கான திட்டமாக இருக்கும், இல்லையென்றால் அது முழுக்க முழுக்க மாநகராட்சியினர் கமிஷன் பெறுவதற்கு மட்டுமே பயன்படும் திட்டமாக கருதப்படுகிறது.

மேலும் மழை நீர் வடிகால்வாய் திட்டம் மூலமாக நல்ல கமிஷன் கிடைப்பதால் இந்த திட்டத்தை நகர்ப்புறங்களில் தவிர்த்து கிராமப்புறங்களிலும் தீவிரப் படுத்தி வருகின்றது உள்ளாட்சி அமைப்புகள். வயல்களில் தானாக வடிந்து சென்று கொண்டிருந்த மழை நீரை எல்லாம் வடிகால் கால்வாய் மூலமாக மழை நீரை கழிவுநீர் செல்கின்ற வடிகால் கால்வாய் வழியாக திருப்பி விடுகிறது உள்ளாட்சி அமைப்புகள். மழைநீர் வடிகால் கால்வாய் என்பது மழை நீரை சேகரிக்கவும் அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் செயல்படுமானால் வரவேற்கப்பட வேண்டிய திட்டமாகும்.

ஆனால் தற்போது மழை நீர் கழிவு நீர் எல்லாம் சேர்ந்து கடலுக்கு செல்கிறது. இந்நிலையில் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் 84வது வார்டு மக்கள் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக மக்களைத் தேடி மேயர் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மனுக்களின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை பொதுமக்களின் மனுக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறது.

* இணைக்கப்படாத கால்வாய்கள்
சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் தொடங்கியபோது ரிப்பன் பில்டிங்கில் இருந்து நேரடியாக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தந்த மண்டலத்தில் உள்ள பொறியாளர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் இருந்து மழை நீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்ட பல இடங்களில் கட்டுமான பணிகள் பாதி பாதியாக நிறுத்தப்பட்டுள்ளது. எங்கு தொடங்கப்பட்டது? எங்கு முடிக்கப்பட்டது? என தெரியவில்லை.

அதனால் தொடங்கிய இடம் முடிவுப் பெற வேண்டிய இடங்கள் இணைப்பு சரியாக இல்லாமல் வடிகால் கால்வாய் மழைநீர் சென்று ஆங்காங்கே தெருக்களில் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் குறைகள தெரிவித்தால் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அது ரிப்பன் பில்டிங்கில் இருந்து நேரடியாக கட்டப்பட்டது. அது சம்பந்தமாக நீங்கள் ரிப்பன் பில்டிங்கில் சென்று முறையிடுங்கள் என மண்டலத்தில் தெரிவிக்கின்றனர்.

* ஒப்பந்த ஊர்திகள் மூலம் கொட்டப்படும் கழிவு நீர்
கொரட்டூர் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் கால்வாய் வில்லிவாக்கம் சிட்கோ, அண்ணா நகர், ஓட்டேரி வழியாக சென்று கடலில் கலக்கிறது. திறந்த நிலையில் காணப்படும் இந்த உபரி நீர் கால்வாயில், 7வது மண்டல்தில் 80, 81, 82, 84, 85, 86 ஆகிய வார்டுகளிலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் இந்த கால்வாயில் நேரடியாக கலக்கிறது. அது மட்டுமின்றி ஒப்பந்த ஊர்திகள் மூலமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்படாமல் அப்படியே இந்த உபரி நீர் கால்வாயில் கொட்டப்படுகிறது.

மழைக்காலங்களில் மழை நீர் மட்டுமே செல்ல வேண்டிய இந்த உபரி நீர் கால்வாயில், ஆண்டு முழுவதும் கழிவுநீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் நிறையும் இந்த கால்வாய் அப்படியே பின் வாங்கி அங்குள்ள குடியிருப்புக்குள் புகுவது மட்டுமின்றி, கொரட்டூர் ஏரிக்கே சென்று திரும்பச் சென்று நன்னீர் ஏரியை கழிவு நீர் ஏரியாக மாற்றுகிறது.

*மழைநீர் சேகரிப்பு இல்லை
மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் மூலமாக அந்தந்த பகுதியில் மழைநீர் சேமிக்கப்படுகிறதா என்றால் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கலாம். வீடு கட்டும்போது மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்க வேண்டும் என்று தமிழக அரசாணை உள்ளது. ஆனால் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டிய மழைநீர் வடிகால் கால்வாய் திட்டத்தில் மழைநீர் சேகரிப்பு என்று எதுவும் இல்லை.

ஆங்காங்கே தெருவில் தேங்கும் மழை நீரானது அருகில் உள்ள குட்டை, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் சென்று தேங்கி விடுவது பூகோள ரீதியாக இயல்பானது. தெருக்களில் தேங்கும் மழை நீர் எல்லாம் அந்த கால்வாய் வழியாக வடிந்து அருகில் உள்ள நீர்நிலைகளில் சென்று அடையும் வகையில் அமைத்து இருந்தால் அந்தந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆனால் மழைநீர் வடிகால் கால்வாய் திட்டம் என்ற பெயரில் தெருக்களில் பெய்கின்ற மழை நீரை எல்லாம் கால்வாய் மூலமாக நேரடியாக கொண்டு கடலில் கொண்டு சேர்த்து விடுகிறது.

Related posts

நீர்வளத்துறை இன்று முக்கிய முடிவு கீழ்பவானி நீர் நிர்வாகத்தில் மாற்றம் விரும்பும் விவசாயிகள்

பெரியகுளம் அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 4 பேர் கைது!!

குடும்ப தகராறு கொலையில் முடிந்தது மனைவியைக் கொன்று புதைத்த டிரைவர் கைது