தொடர் விடுமுறையால் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள் இளவரசி மண்ணில் இரவிலும் டிராபிக்: அர்த்த ராத்திரியிலும் படையெடுப்பால் 10 கி.மீ ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்

கொடைக்கானல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். இதனால் தங்க இடம் கிடைக்காமலும், போக்குவரத்து நெரிசலாலும் பலர் மலையிறங்கியதால் இரவிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 10 கி.மீ வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது. தொடர் விடுமுறை விட்டாலே மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பது வழக்கம். கடந்த செப்.28ம் தேதி மீலாடி நபி விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாள். தொடர்ந்து சனி, ஞாயிறு நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால், கொடைக்கானலுக்கு கடந்த 5 நாட்களாகவே பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குடும்பம் குடும்பமாக திரண்டனர்.

இதனால் நகர்ப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுவாக, கொடைக்கானலில் சீசன் மற்றும் விடுமுறை நாட்களில் பகலில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். பெரும்பாலானோர் இரவு 7 மணிக்கு மேல் மலையிறங்க விரும்புவதில்லை. ஒரு சிலர் மட்டுமே, அவசர சூழல் காரணமாக கிளம்பிச் செல்வார்கள். ஆனால், கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் சென்றவர்களுக்கு ரூம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவில்லை. முக்கிய சுற்றுலா இடங்களையும் காண முடியவில்லை. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் வேறு. எனவே, பலரும் மலையை விட்டு வாகனங்களில் தரையிறங்கத் தொடங்கினர்.

இதனால் நேற்று முன்தினம் இரவிலும் சாலைகள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. குறிப்பாக கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதி, அப்சர்வேட்டரி, கொடைக்கானல் – வத்தலக்குண்டு சாலையில் சீனிவாசபுரம் அருகில் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்தால் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. மேலும் சாதாரணமான நாட்களில் கொடைக்கானலில் இருந்து மலையிறங்க 2 மணிநேரம் ஆகும். ஆனால் தற்போது இரவிலும் நிலவும் இந்த போக்குவரத்து நெரிசலால் மலையிறங்க 4 மணி நேரமாவதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.

கொடைக்கானல் மோயர் பாய்ண்ட் அருகே உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் நேற்று காலை 8 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய சோதனைச்சாவடி, 11 மணிக்குத்தான் திறக்கப்பட்டது. இதனால், சோதனைச்சாவடி முன்பிலிருந்து கொடைக்கானல் நகர் பகுதியை தாண்டி சுமார் 10 கிமீ தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் கூட, போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்தனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம்!

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அஞ்சலி