தென் மாநிலங்களில் தொடர் கைவரிசை; கொள்ளையன் ‘ஸ்பைடர் மேன்’ சதீஷ் ரெட்டி கைது

திருவனந்தபுரம்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்பட தென்மாநிலங்களில் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து வந்த ‘ஸ்பைடர் மேன்’ என்று அழைக்கப்படும் சதீஷ் ரெட்டியை ஆந்திர மாநிலம் கடப்பாவில் திருவனந்தபுரம் போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே உள்ள மங்கலபுரத்தில் கடந்த மாதம் 2ம் தேதி பூட்டிக் கிடந்த வீட்டுக்குள் புகுந்து ஒரு மர்ம ஆசாமி 38 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றான். இது தொடர்பாக மங்கலபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்த போது திருடனின் போட்டோ கிடைத்தது. முதற்கட்ட விசாரணையிலேயே அவர் கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போட்டோவை திருவனந்தபுரம் போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட தென் மாநில போலீசுக்கு அனுப்பி வைத்தனர். இதில் கொள்ளையடித்த ஆசாமி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் சதீஷ் ரெட்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் சதீஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார், கடப்பா பஸ் நிலையத்தில் சதீஷ் ரெட்டியை கைது செய்தனர். பின்னர் போலீசார் சதீஷ் ரெட்டியை திருவனந்தபுரத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சதீஷ் ரெட்டி பணக்காரர்களின் வீடுகளில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை யூடியூபில் பார்த்து அரங்கேற்றி வந்துள்ளார். எவ்வளவு பெரிய சுவராக இருந்தாலும் மிகவும் சுலபமாக ஏறிக் குதித்து விடுவார். இதனால் தான் அவருக்கு ‘ஸ்பைடர் மேன்’ என்ற பெயர் வந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்பட மாநிலங்களில் இவர் மீது 70க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. ஆந்திராவிலுள்ள ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து இவர் 7 கிலோ நகைகளை கொள்ளையடித்தார். கடந்த ஏப்ரலில் காஞ்சிபுரத்தில் ஒரு நகை வியாபாரியின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ நகைகளை கொள்ளையடித்த சதீஷ் ரெட்டியை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மே மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானவர் 4 நாட்களிலேயே திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை