மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் உருவானது இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துணைவேந்தர் சந்தோஷ்குமார், பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்ட பல்கலைகழக மாணவர்கள் ஆளுநர் முன்னிலையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நமது அரசியலமைப்பு சட்டம் தீண்டாமையை நீக்குவதாக இருக்கவேண்டும். அனைவருக்குமான சமத்துவம் கொண்டதாக இருக்கவேண்டும். தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது. சுதந்திரத்திற்காக போராடும் போது ஒற்றுமையாக இருந்தோம். அதன் பிறகு அவரவர் தாய் நிலம் என்றும் தாய்மொழி என்றும் பிரிந்து உள்ளோம். நாம் தனித்துவம் வாய்ந்த நாடு என்பதை உணரவேண்டிய நேரம் இது. நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் நேரம் இது. சுதந்திரம் பெற்ற பின் மக்கள் வளர்ச்சியை நோக்கி நகரவேண்டும்.

ஆனால் குறிப்பிட்டவர்கள் மட்டுமே வளர்ச்சியை நோக்கி முதல் வரிசையில் நிற்கின்றனர். அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய அனைவருக்குமான அரசிலமைப்பு சட்டத்தை இயற்றினால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று இருந்த போது, முகமது அலி ஜின்னா தனிநாடு கேட்டு போராடினார். அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. தனித்துவம் வாய்ந்த பல்வேறு குழுக்களின் மூலம் நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. நாம் மாநிலங்கள் என்ற அளவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம்.

நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இங்கே பரவி உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்