தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும்: எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தல்

டெல்லி: தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும் என எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். மோடி தலைமையிலான அரசு மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், நடப்பாண்டுக்கான முழு பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து லோக்சபாவில் எம்.பி. சுப்பராயன் உரையாற்றினார். அதில், தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை பின்பற்றுக

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.65 லட்சம் மட்டுமே ஒதுக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.4 கோடியை மேம்பாட்டு நிதியாக வழங்குகிறார். தொகுதி மேம்பாட்டு நிதியில் தமிழ்நாட்டில் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு தருக-சுப்பராயன்

தமிழ்நாட்டை போல் ஒன்றிய அரசும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.4 கோடி என கணக்கிட்டு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியில் இருந்து தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும். பட்ஜெட் விவாதத்தின் மீது பதிலளித்து பேசும்போது நிதி அமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும். ஊழலைப் பற்றிப் பேச ஒன்றிய பாஜக அரசுக்கு தார்மீக அருகதை இல்லை. நம்பகத்தன்மை உள்ளவர்களாக 10 ஆண்டு காலம் பாஜக அரசு நடந்து கொள்ளவில்லை. 10 ஆண்டுகளாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு, புதிய வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும்? கேள்வி எழுப்பினார். ஊட்டச்சத்து குறைபாட்டில் இந்தியா உள்ள நிலையில், வளர்ச்சி, முன்னேற்றம் எனக் கூறி யாரை ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய அரசு.

பட்ஜெட் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது

தங்களின் மலிவான அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பீகார், ஆந்திராவுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பீகார், ஆந்திராவுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அரசியல் பித்தலாட்டம் என்று சுப்பராயன் விமர்சனம் செய்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்தான் ஒன்றிய அரசு ஆதரவாக உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தையே ஒன்றிய பாஜக அரசு தகர்த்துவிட்டது. 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று சுப்பராயன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

 

Related posts

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு

பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்; காவல் துறையுடன் வாக்குவாதம்