காவலர், ராணுவ வீரர், குரூப் 4 பணி: இளைஞர்களுக்கு எஸ்.ஐ. இலவச பயிற்சி: 9 ஆண்டுகளில் 300 பேர் தேர்ச்சி

திருவாரூர்: திருவாரூர் அடுத்த ஆண்டிப்பாளையம் வரதராஜன்-அம்சவள்ளி தம்பதியின் 2வது மகன் சதீஷ்குமார்(32). வரதராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ள நிலையில், அம்சவள்ளி அரசு பள்ளியில் சத்துணவு கூட சமையலராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் பிஎஸ்சி வரை படித்துள்ளார். இவரது அண்ணன் கொத்தனாராக உள்ளார். சீருடை பணியாளர் தேர்வெழுதி வெற்றி பெற்று திருவாரூரில் இரண்டாம் நிலை காவலராக சதீஷ்குமார் பணியாற்றினார். இவர் பணியாற்றி கொண்டே 2017ம் ஆண்டு எஸ்ஐ தேர்வெழுதி வெற்றி பெற்றார். அதன்மூலம் திருவாரூர் மாவட்ட தடயவியல் துறையில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார்.

தன்னை போன்று சாதாரண குடும்ப பின்னணி கொண்டு காவல்துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 2017ம் ஆண்டில் இருந்து சீருடை பணியாளர் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வந்தார். பொது வெளியிலேயே இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதில் 3 பேர் தேர்ச்சியும் பெற்றனர். இதைதொடர்ந்து காவலர், குரூப் 4, அக்னிபாத் வீரர் போன்ற பல்வேறு துறை சார்ந்த தேர்வுக்கு இலவச பயிற்சி அளித்து வந்தார். இவரின் முயற்சிக்கு நண்பர்களும் உதவியாக இருந்தனர்.

கடந்த 9 ஆண்டுகளில் சதீஷ்குமாரிடம் பயிற்சி பெற்ற 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு துறை போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து எஸ்ஐ சதீஷ்குமார் கூறியதாவது: நான் மிகவும் சிரமப்பட்டு காவலர் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். எனக்கு வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை. ஆர்வமிருந்தும் என்னை போலவே பலர் சிரமப்படுவதை அறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்தேன். எனக்கு நண்பர்களும் உதவி செய்தனர். தினம்தோறும் காலை 5 மணி முதல் 7 மணி வரை உடற்திறன் பயிற்சி, 8 முதல் 10 மணி வரை எழுத்துத்தேர்வு பயிற்சி அளித்து வருகிறோம். எனது ஓய்வுநேரத்தில் நான் பயிற்சி அளிப்பேன். நான் இல்லாவிட்டாலும் வகுப்புகளை எனது நண்பர்கள் நடத்துவர் என்றார்.

இரண்டாம் நிலை காவலர் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ள தாரணி கூறியதாவது: எனது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டார். அண்ணன் சதீஷ்குமார் என்னை ஊக்கப்படுத்தி காவல்துறை தேர்வை எழுத வைத்தார். தற்போது அதில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பயிற்சிகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. தேர்ச்சி பெற்று செல்லும் சீருடை பணியாளர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே சதீஷ்குமாரின் நோக்கம் என்றார். ஏழை குடும்ப பின்னணியில் உள்ளோர் தன்னை போலவே சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சேவையாற்றி வரும் சதீஷ்குமாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related posts

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி