நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ அரசின் சூழ்ச்சி வெளியாகிவிட்டது: துரை வைகோ கண்டனம்

சென்னை: நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசின் சூழ்ச்சி வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது என மதிமுக முதன்மை செயலாளார் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 16 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். இதற்கு 2.7லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், ஒன்றிய பாஜ அரசு வெறும் 60,000 கோடி தான் ஒதுக்கி உள்ளது.

நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தும் விதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு, நேரடியாக பல கோடி பட்டியலின மக்களின் வாழ்வை இதன்மூலம் சிதைக்கிறது; அழிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பல தவறான கொள்கைகளால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி குறைப்பை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும்.

இல்லாவிடில், ஏழை எளிய மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கிறேன். நிதிக் குறைப்பு ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் பேசியிருக்கிறார். ஒன்றிய பாஜக அரசு அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆளுநர்களின் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நினைப்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என பேசியிருப்பதை மதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை