மின் இணைப்பில் மொபைல் எண் புதுப்பிக்க கியூஆர் குறியீடு அறிமுகம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: மின் இணைப்பில் மொபைல் எண்ணை புதுப்பிக்க, மாற்ற கியூஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் வசதிக்காகவும், பயன் பாட்டுக்காகவும், மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில் மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க கியூஆர் குறியீடு வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியத்தில் ஏற்கனவே இணையதளத்தில் மொபைல் எண்களைப் புதுப்பிப்பதற்கான வசதி உள்ளது, தற்போது கியூஆர் குறியீடு நுகர்வோருக்கு இதை இன்னும் எளிதாக்கும். கியூஆர் குறியீடு அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இருக்கும், அதை ஸ்கேன் செய்வதன் மூலம் மொபைல் எண்ணை புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய வீட்டிற்கு குடிபெயரும் வாடகைதாரர்களுக்கும், முந்தைய உரிமையாளர்களின் எண்ணை மாற்றி பயன்படுத்திய வீடுகளை வாங்குபவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களை குறிப்பிடும் வசதி இருக்கும். இந்த வசதி மூலம் நுகர்வோர் தங்கள் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கலாம், நுகர்வோர் எண்ணுடன் இணைக்கப்பட்ட கூடுதல் மொபைல் எண்களைச் சரிபார்க்கலாம் மற்றும் தேவையற்ற மொபைல் எண்களை நீக்கலாம். புது இணைப்பு, புகார், கட்டணம் உள்ளிட்ட வசதிகள் பெறவும் கியூஆர் குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்