காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: விளவங்கோடு புதிய பெண் எம்எல்ஏ பேட்டி

சென்னை: காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று புதிதாக பதவியேற்றுக் கொண்ட பெண் எம்எல்ஏ கூறினார். விளவங்கோடு சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட தாரகை கத்பர்ட் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சபாநாயகர் முன்னிலையில் நான் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளனர்.

அதற்காக பெருமூச்சாக உழைத்த, காங்கிரஸ் கட்சியின் தோழமை கட்சியான திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், எங்களுக்கு உறுதுணையாக இருந்து 41 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்கான அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில், திமுகவுக்கு முக்கியமாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், என்னை முதலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தாலும் திருநெல்வேலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மேடையில்தான் என்னை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போதே, எனக்கு வெற்றி கனியை பறிப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்தது. நான் நிற்பதாக நினைத்து அவருக்கு (தாரகை) வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் என்னை அறிமுகப்படுத்தினார். முதல்வர் செய்த அனைத்து திட்டங்களுக்கு கிடைத்த வெற்றிதான் எனக்கு கிடைத்த வெற்றி.

எனக்கு இன்னும் 2 வருடம்தான் இருக்கிறது. காமராஜர் ஆட்சியில் கொண்டு வந்த கோதையார் அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். விளவங்கோடு தொகுதியில் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பாடுபடுவேன். காங்கிரசில் எப்போதும் பெண்களுக்கு பதவியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்போது முன்னாள் எம்எல்ஏ பற்றி பேசி பயன் இல்லை. முன்னாள் எம்எல்ஏவுக்கும் காங்கிரசில் பல பதவிகள் கொடுக்கப்பட்டது. காங்கிரசில் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ஒரு பெண்தான் இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்