பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை காந்திய வழியில் வந்தேன் என்று சொல்லிக்கொண்டு திரிவதாகவும். அவர் மீது குற்றப்பின்னணி பெயர் பட்டியலிலும், கிரிமினல் வழக்குகள் பட்டியலிலும் பெயர் பதிவாகியுள்ளதாக பகிரங்கமாக பேசினார். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், உண்மைக்கு புறம்பாக தவறான கருத்தினை பேசி அவதூறு பரப்பும் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவதூறு வழக்கு மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனிடையே, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை மற்றும் பாஜ அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே செங்கல்பட்டு காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் பாஸ்கர் ஏற்பாட்டில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஜெயராமன், குமரவேல், ரியாஸ்பாய், பால்ராஜ், மறைமலைநகர் தனசேகர், லத்தூர் தாமோதரன், மகளிரணியை சேர்ந்த வேல்விழி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அண்ணாமலைக்கு எதிராகவும் பாஜ அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் தலைமையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மணிகூண்டு அருகில் நேற்று நடைபெற்றது.

இதில், 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு, அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த, ஆர்ப்பாட்டத்தில் வாட்டர் தலைவர் நிக்கோலஸ், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினத்தில் நேற்று நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ரஞ்சித் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் கிங் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக இசிஆர் சாலையை நோக்கி வந்தனர். அப்போது, திடீரென இசிஆர் சாலையில் அமர்ந்து அண்ணாமலையை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கல்பாக்கம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related posts

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!!

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வயநாடு நிலச்சரிவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரணம்