பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு காங். எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் கைது

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமாரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். சென்னை வரும் அவர் கல்பாக்கத்தில் நடைபெறும் ஒன்றிய அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து மாலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் “தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்த மோடி, தமிழ் மண்ணில் கால் பதிக்க விடமாட்டோம்.. பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று ஏற்கெனவே எச்சரித்து இருந்தார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை, சென்னை போரூரில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பிரதமர் இன்று இரவு திரும்பி செல்லும் வரை அவரை வீட்டு சிறையில் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த முறை தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ரஞ்சன் குமார் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது