காங்கிரசுக்கு வடமாநிலங்களில் நம்பிக்கையில்லை; வயநாடு தொகுதியை குறிவைக்கும் மா.கம்யூ: ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுவாரா?

புதுடெல்லி: வயநாடு தொகுதியில் மா.கம்யூ. கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ராகுல்காந்தி அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்பது கேள்வியாக உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, தற்போது ஒடிசாவில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் காங்கிரசுடனான கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கவில்லை.

இருந்தும் மேற்கண்ட தலைவர்கள் ‘இந்தியா’ கூட்டணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில், மா.கம்யூ கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போது வயநாடு தொகுதி குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து மா.கம்யூ எம்பி பினோய் விஸ்வம் கூறுகையில், ‘வயநாடு தொகுதி ராகுலுக்கு பாதுகாப்பானது என்று காங்கிரஸ் கருதுகிறது. வடமாநிலங்களில் பாஜகவுடன் காங்கிரசுக்கு போட்டி நிலவுகிறது. அங்கு அதிக தொகுதிகள் உள்ளன.

ஆனால் அங்கு போட்டியிட காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ராகுல் உண்மையிலேயே பாஜகவுக்கு சவால் விட விரும்பினால், வட மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்றார். இவரது கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ், இதுகுறித்து கூறுகையில், ‘இடதுசாரி கட்சிகள் ராகுல் காந்தியை ஆதரிக்க வேண்டும். வயநாட்டில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கேரள மக்களும் தொழிலாளர்களும் விரும்புகின்றனர்’ என்றார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி