எம்எல்ஏ பதவி வேண்டாம்; எம்பி சீட் வேண்டும்: தலைமைக்கு தலைவலி தரும் காங்., எம்எல்ஏக்கள்


சென்னை: தமழ்நாட்டில் ஏப்ரல் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது ஓரிரு நாளில் முடிவாகிவிடும். இதற்கு பிறகு தான் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் அனல் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த முறை சீட் கேட்டு ஏராளமானோர் காத்திருக்கின்றனர். பலர் டெல்லிக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தங்களுக்கு சீட் வாங்கி தரும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்த சூழ்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் களம் உச்சத்தை தொட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், காங்கிரசுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு விட்டால் அடுத்த சில நாட்களில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமை உள்ளது. இந்தநிலையில், கட்சி பணியில் தீவிரம் காட்டிய முக்கிய நிர்வாகிகள் பலர் வாய்ப்பு கேட்டு தலைமையிடம் முறையிட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் சிலர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமையை அணுகி இருப்பது மேலிடத்தை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, தேனி தொகுதிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா வெளிப்படையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, திருநெல்வேலி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலோ அல்லது கன்னியாகுமரி தொகுதியிலோ போட்டியிட வாய்ப்பு கேட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர் மேலிடத்தை அணுகி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக அமைந்துள்ளதால் வெற்றி பெறும் சூழ்நிலையில், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அந்த தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதை டெல்லி மேலிட தலைவர்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. எனவே எம்எல்ஏ பதவிகளில் இருப்பவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கேட்டு வருவது டெல்லி தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்