இரண்டு வாரங்களாக போக்கு காட்டி வந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜவில் இணைந்தார்

சென்னை: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி, நேற்று டெல்லி பாஜ தலைமையகம் சென்று பாஜவில் சேர்ந்தார். விளவங்கோடு எம்எல்ஏவாக விஜயதரணி 3வது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சியின் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறார். ஆனால், விஜயதரணி தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனவே, எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி எப்படியாவது போட்டியிட வேண்டும் என பல்வேறு முயற்சி மேற்கொண்டார். ஆனால், ராகுல்காந்தி நெருக்கம் மற்றும் அனுதாப ஓட்டு என்ற அடிப்படையில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்று முதல் கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதரணி தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.

தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி தலைமையிலான தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என்ற பேச்சு அடிபட்ட போது, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற டெல்லி தலைமையிடம் காய் நகர்ந்தி வந்தார். ஆனால் அவருக்கு தலைவர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை தனக்குச் சீட்டு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கூறினார். ஆனாலும் தொகுதியில் நல்ல பெயர் எடுத்துள்ள விஜய் வசந்துக்கே மீண்டும் சீட் வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கடும் அதிருப்தியில் விஜயதரணி இருந்து வருவதாகவும் விரைவில் பாஜவில் இணைய உள்ளதாகவும் கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தன. இரண்டு வாரமாக விஜயதரணி டெல்லியில் முகாமிட்டிருந்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் கூட அவர் பங்கேற்கவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை பதவி ஏற்கும் நிகழ்வு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தபோதும் விஜயதரணி வரவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்திற்குச் சென்ற விஜயதரணி, பாஜவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் விஜயதரணி இணைந்துள்ளார். அவருக்கு பாஜ முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரு வளர்ச்சி அடைந்துள்ளது. அவரது சேவை நாட்டிற்கு தேவை. உலகளவில் மோடி மிகப்பெரிய தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பாஜவை வலுப்படுத்தவே இந்த கட்சியில் தற்போது இணைந்துள்ளேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கட்சியின் தலைமைக்கு பெண்கள் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். 3 முறை காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்துள்ளேன். ஆனால் எனக்கு அங்கு போதிய மதிப்பளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜவில் இணைந்தேன். நான் விலகியதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இது ஒரு கடினமான சூழல்தான். இருந்தாலும் எல்லாம் முடிந்துவிட்டது. இவ்வாறு விஜயதரணி தெரிவித்தார்.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!