செங்கோட்டையில் ஏற்ற மாட்டார்; மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தேசிய கொடி ஏற்றுவார்: காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி

புதுடெல்லி: பிரதமர் மோடி அடுத்த ஆண்டு தேசிய கொடி ஏற்றுவார். அது செங்கோட்டையில் அல்ல. அவரது வீட்டில் தான் தேசிய கொடி ஏற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி பேசுகையில்,’ அடுத்த ஆண்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன்’ என்று தெரிவித்தார். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: பிரதமர் மோடி சொல்வது ஆணவத்தைப் பற்றிய பேச்சு. இப்போது 2023, மீண்டும் 2024ல் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று சொல்வது திமிர் மற்றும் அகங்காரம். அவரும் எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். சுதந்திர தினத்தன்று கூட அவ்வாறு செய்தால், அவர் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்குவார்.

அடுத்த ஆண்டு அவர் மீண்டும் கொடியை ஏற்றுவார். ஆனால் அவரது சொந்த வீட்டில் அது நடக்கும்’ என்றார். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘அடுத்த ஆண்டு செங்கோட்டையில் யார் உரை நிகழ்த்துவது என்பதை முடிவு செய்வது மக்களின் சக்தி. அதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்’ என்றார். ஆம் ஆத்மி எம்பி சுஷில் குமார் குப்தா கூறுகையில், ‘ஒன்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் அவர் தனது ஆட்சியில் என்ன செய்தோம் என அறிக்கை அட்டையை கொடுக்க முடியாமல் இருப்பது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. அடுத்த வருஷம் ரிப்போர்ட் கார்டை தருவேன்னு சொன்னா, அது எப்படி சாத்தியம். அடுத்த ஆண்டு யார் ஏற்றுவார் என்பதை முடிவு செய்வது பொதுமக்களின் விருப்பம்’ என்றார்.

செங்கோட்டை விழாவை தவிர்த்த கார்கே
டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மற்றும் இதர தலைவர்கள் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவரான கார்கேவுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மல்லிகார்ஜூன கார்கே விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் தனது வீட்டில் தேசியக்கொடிஏற்றிய பின்னர் காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றுவதற்கு சென்றுவிட்டார். செங்கோட்டையில் இருந்து காங்கிரஸ் அலுவலகம் வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கார்கே தெரிவித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை