ஆளுநரு மோசமா நடந்துக்கிட்டாரு: குழப்பத்தில் அண்ணாமலை ஆவேசம்

சென்னை, தண்டையார்பேட்டையில் வடசென்னை நாடாளுமன்ற தேர்தல் பாஜ அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதை கேட்டு அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல, சுற்றி நின்றிருந்த கட்சி நிர்வாகிகளுக்கும் குழம்பிவிட்டது. அனைவரையும் கலங்கடித்த அண்ணாமலையின் அந்த பேச்சு இதுதான்: ‘‘ஆளுநரு நியூட்ரல் ஜட்ஜ். அவர் எந்த கட்சி உறுப்பினரும் கிடையாது. இப்ப வேணா ஆளுநர் மாத்தி பேசலாம். ஆளுநரு திமுக உறுப்பினர் கிடையாது. ஆனா திமுக உறுப்பினரை விட ஆளுநரு மோசமா நடந்துகிட்டாரு, அதனாலதான் ஆளுநரு வெளிநடப்பு செய்தார்….’’ – இதேபோல் அண்ணாமலை விடாமல் பேசிக்கொண்டே போனார். சபாநாயகர் என்று சொல்வதற்கு பதிலாக ஆளுநர் என சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது கொஞ்ச நேரத்துக்கு பிறகுதான் எல்லோருக்கும் புரிந்தது. உடனே தொண்டர்கள் குறுக்கிட்டு, ‘சபாநாயகர்… சபாநாயகர்’ என்று ‘ஹஸ்கி’ வாய்ஸில் குரல் கொடுத்ததற்கு பின்தான் ஆளுநரை திட்டுவதை அண்ணாமலை நிறுத்திக்கொண்டார். கட்சி மாநில தலைவர் இப்பிடி பேசிக்கொண்டிருக்கிறாரே என்று பாஜ தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது