ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டு சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை எடுத்து சென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நயினார் நாகேந்திரன், ஆசைதம்பி, சென்னை அபிராமிபுரத்தை சேர்ந்த பாஜக மாநில தொழில் துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர், நவீன், பெருமாள் உள்ளிட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் ஆகியோர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜரானார்கள்.அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டனுக்கு மீண்டும் நாளை சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குப் பிறகு நேரில் ஆஜராகும்படி தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பவுள்ளனர்.

Related posts

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்