வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கம்மை உறுதி: பரவும் ஆபத்து இல்லை என ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகி இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்காவில் வேகமாக பரவும் குரங்கம்மை பிற நாடுகளுக்கும் பரவுவதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களிடம் குரங்கம்மை அறிகுறிகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. தற்போது அதிகமாக குரங்கம்மை பரவும் நாட்டில் இருந்த இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டது. இந்நிலையில், அறிகுறிகளுடன் வந்த நபருக்கு குரங்கம்மை நோய் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிகுறிகளுடன் இந்தியா வந்த நபருக்கு மேற்கு ஆப்ரிக்கா கிளேட்-2 வகை எம்பாக்ஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2022 ஜூலை முதல் கடந்த மார்ச் வரையிலும் இந்தியாவில் 30 பேருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதைப் போலவே இதுவும் ஒரு தனிநபருக்கு ஏற்பட்ட தொற்று. கிளேட்-1 வகை வைரஸ் பரவலைத் தொடர்ந்தே உலக சுகாதார நிறுவனம் பொது சுகாதார அவசரநிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அந்த வகையை சேர்ந்த விரீயமிக்க வைரஸ் அல்ல. குரங்கம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞர் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட நபர் 26 வயதுடைய அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்தவர் என்றும், டெல்லி எல்என்ஜேபி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு