மழையில் நனைந்த நெல்லை தனியாரிடம் விற்கும் சூழ்நிலை கொள்முதல் நிலைய விதிகளை தளர்த்த வேண்டும்

* உடனடி பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்

* தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

வல்லம் : மழையில் நனைந்து காய வைத்து கொண்டு வரப்படும் நெல்லை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதால் சிரமத்தை சந்தித்து வரும் விவசாயிகள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து குறைந்துள்ளது. ஈரப்பதம் விதிமுறைகளில் தளர்வு செய்தால் தான் கொள்முதல் நிலையத்திற்கு
நெல் வரத்து அதிகரிக்கும் என்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தஞ்சாவூர் அருகே வல்லம், கல்விராயன்பேட்டை, ஆலக்குடி உள்பட பல இடங்களில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயில் தலை காட்டியதால் விவசாயிகள் நெல் மணிளை இயந்திரம் வாயிலாக அறுவடை செய்து முடித்தனர்.

தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக காய வைக்கப்பட்டு இருந்த நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர் அருகே ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் இன்னும் சில விவசாயிகள் குறுவை அறுவடையை தொடங்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் 17 சதவீத ஈரப்பதம் வரை இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதற்கிடையே தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் காய வைத்த நெல் ஒரு சில பகுதிகளில் நனைந்து விட்டது.இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யாமல் உடனடியாக தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். நெல் வியாபாரிகள் 62 கிலோ மூட்டை நெல்லை ரூ.1280க்கு விலைக்கு எடுத்துக்கொள்கின்றனர். மேலும் ஈரப்பதம் பார்ப்பதில்லை. நெல்லை தூற்றுவதும் இல்லை. முக்கியமாக உடனடியாக பணம் பட்டுவாடா செய்கின்றனர்.

ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்து வருகின்றனர். கொள்முதல் நிலையங்களை விட விலை சற்று குறைவாக இருந்தாலும் உடனடியாக விற்பனை முடிந்து விடுகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு செல்லும் செலவு மிச்சமாகிறது. மேலும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்லும் நெல்லை அங்கு இரண்டு நாட்கள் வைத்து தூற்றி பின்னர் தான் விற்பனை செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது.

இதுபோன்ற காரணங்களால் கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனே கொள்முதல் செய்து பணத்தை பெற முடியவில்லை. ஆனால் வியாபாரிகளிடம் நெல்லை விவசாயிகள் உடனே விற்பனை செய்து பணத்தை பெற்று விடுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கொள்முதல் செய்வதில் விவசாயிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனால் தனியாரிடம் நெல்லை விற்று வருகின்றனர். விவசாயிகளின் இந்த முடிவு காரணமாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து குறைந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நாங்கள் நெல்லை காய வைத்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு கொடுத்தால் அங்கு 17 சதவீதம் ஈரப்பதம் கணக்கிடப்படுகிறது. அதற்கு மேல் இருந்தால் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அப்படியே எடுத்தாலும் மெஷினில் தூற்றும் போது கழிவுகள் நிறைய போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு அனுமதி சான்று பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அதை வாங்குவதற்கு பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. ஒரு மூட்டை நெல்லை விற்க கொள்முதல் நிலையத்தில் 40 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டியதிருக்கிறது.17 சதவீதத்துக்கு கீழ் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடுத்துக்கொள்கிறார்கள்.

அதற்கு மேல் இருந்தால் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். நாங்கள் நெல்லை கொண்டு வந்து காய வைக்க வேண்டியதிருக்கிறது. அவ்வாறு காய வைக்கும் போது அதற்கு செலவு அதிகமாகி விடுகிறது. அதனால் கட்டுப்படியாகவில்லை. எனவே தான் நாங்கள் தனியாரிடம் நெலலை விற்பனை செய்து வருகிறோம். ஆகவே நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள விதிகளை தளர்த்த வேண்டும்.

ஈரப்பதம் எவ்வளவு இருந்தாலும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எங்களுக்கு சுலபமாக இருக்கும். நாங்கள் சிரமப்பட வேண்டியதிருக்காது.எனவே மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையங்களில் நெலலை கொள்முதல் செய்யும் போது ஈரப்பதம் விதிகளில் தளர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரிக்கும் என்றனர்.

Related posts

54 ஆண்டுகளுக்கு பிறகு அதிக நன்கொடை.. சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்!!

வயநாடு நிலச்சரிவு: ரூ.2 கோடி நிதி வழங்கினார் நடிகர் பிரபாஸ்

“நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய்”.. :கலைஞருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்