போதையில் தாயை அடித்து கொடுமை தந்தையை கொலை செய்த மகனுக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சோளிங்கர் தாலுகா மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு யுவராஜ் (26) என்ற மகனும் நிவேதா (24) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. யுவராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருகிறார். கோபி மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை யுவராஜ் தொடர்ந்து கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 4ம் தேதி கோபி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதை பார்த்த யுவராஜ் தட்டிக்கேட்டுள்ளார்.

மறுநாள் காலை மீண்டும் மது அருந்திய கோபி தனது மனைவியின் கையை பிடித்து முறுக்கி அடித்துள்ளார். அப்போது, யுவராஜ் கண்டிக்கவே அவரை திட்டியதுடன் கன்னத்திலும் கோபி அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் அருகில் கிடந்த கல்லை எடுத்து தந்தையின் தலையின்மீது எறிந்துள்ளார். இதில் படுகாயமடைந்த கோபி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி யுவராஜ் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரவீன்நாத் ஆஜராகி, கொலை செய்யும் நோக்கம் இல்லை. குடித்துவிட்டு வந்து தாயை அடித்த தந்தையை தட்டிக்கேட்கும் விதத்தில் நடந்த சம்பவம்தான் இது. இது கொலையாகாது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ரூ.10 ஆயிரத்திற்கான பாண்ட் மற்றும் அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதத்தில் யுவராஜுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 3 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். அதன் பிறகு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தப்பிச்செல்ல கூடாது என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

Related posts

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 2 தமிழக வீரர்களுக்கு வரவேற்பு