கணினி தமிழை கொண்டு வந்தவர் கலைஞர், கணினி தொழில் நுட்பத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு

மதுராந்தகம்: கல்விக்கண் திறந்தவர் காமராஜர், கணினி தமிழைக் கொண்டு வந்தவர் கலைஞர், கணினி தொழில் நுட்பத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின் என சைக்கிள் வழங்கும் விழாவில் சுந்தர் எம்எல்ஏ கூறினார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், வீராணகுண்ணம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அன்புராம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளியில் கலையரங்கை திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுந்தர் எம்எல்ஏ பேசியதாவது:

நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக உயர்கல்வியை எப்படி தேர்வு செய்யலாம், வேலை வாய்ப்பு பெறுவது எப்படி, தங்களது திறமைகளை எப்படி எல்லாம் வளர்த்துக் கொள்வது உள்ளிட்ட மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளதால் இலக்கை தாண்டிய சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளின் தாய் மொழிகளில் மென்பொருள் இருந்து வந்தது, தமிழில் மென்பொருள் இல்லாமல் இருந்தது.

இதனால் தமிழில் மென்பொருள் உருவாக்க தமிழ் 99 என்ற மாநாட்டை நடத்தி தமிழில் மென்பொருள் கிடைக்க, அதற்கு உண்டான மென்பொருளை ஏற்படுத்தி புரட்சி செய்தவர் கலைஞர். சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற பன்னாட்டு கணினி தமிழ் 2024 என்ற நிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், ட்ரான்ஸ்லேட்டிங், உள்ளிட்ட துறைகளை தமிழில் கொண்டு வந்து எளிதில் புரியும் வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார். ஆகவே, தகவல் தொழில்நுட்ப அறிவு இன்னும் பல மடங்கு தமிழ்நாட்டிலே உயர்ந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளிலேயே கல்வியில் அதிநவீன மயமாக்கப்படுவதை நாம் காண இருக்கின்றோம்.

மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் கணினி படிப்பிலே நன்கு படிக்க வேண்டும், கணினி வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கணினி பயிற்சியினை பெற வேண்டும். கல்விக்கண் திறந்தவர் காமராஜர், கணினி தமிழைக் கொண்டு வந்தவர் கலைஞர், கணினி தொழில்நுட்பத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சசிகுமார், வெங்கடேசன், சக்கரபாணி, சுமித்ரா தேவி, குமார், தனபால், ரோஸ் சகாயராஜ், பத்மா செல்வராஜ், அரசு, உள்ளிட்ட பெற்றோர், கிராமமக்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.