மாயமான மாணவர்கள் கொலை வழக்கில் 7 பேரின் கைதை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இம்பால்: மணிப்பூரில் மாயமான மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூரில் நடந்த பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மணிப்பூரில் தொடர் இனக்கலவரத்திற்கு நடுவே, சமீபத்தில் மாயமான 2 மாணவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வன்முறையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

மேலும் மணிப்பூர் வன்முறையில் அண்டை நாடுகளின் சதி இருப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனியாக வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இந்த இரு வழக்குகளிலும் என்ஐஏ மற்றும் சிபிஐ, 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் குக்கி இனத்தை சேர்ந்தவர்கள். எனவே இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியின அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தன. கைதானவர்களை 48 மணி நேரத்தில் விடுவிக்கக் கோரியும், பழங்குடியினர் கூட்டமைப்பான ஐடிஎல்எல் காலவரையற்ற பந்த் போராட்டத்திற்கும், சுராசந்த்பூரைச் சேர்ந்த கூட்டு மாணவர் அமைப்பு (ஜேஎஸ்பி) 12 மணி நேர பந்த்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, சுராசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடந்தது.

பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள், மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இதற்கிடையே, சிபிஐ மற்றும் என்ஐஏ போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் குக்கி இளைஞர்களை குறிவைத்து கைது நடவடிக்கை எடுத்து வருவதாக பழங்குடியினர் கூறிவரும் குற்றச்சாட்டை, இரு விசாரணை அமைப்புகளும் மறுத்துள்ளன. வன்முறை தொடங்கியதில் இருந்தே, ஆதாரங்கள் அடிப்படையிலேயே ஒவ்வொரு கைது நடவடிக்கையும் நடப்பதாக விளக்கம் அளித்துள்ளன.

Related posts

ஜூலை-07: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்