Thursday, July 4, 2024
Home » காலை, மாலை வருகை பதிவுக்கு மட்டும் செல்வதாக புகார்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: தமிழ்நாடு அரசு அதிரடி

காலை, மாலை வருகை பதிவுக்கு மட்டும் செல்வதாக புகார்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: தமிழ்நாடு அரசு அதிரடி

by Ranjith

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் தலைமையிலான அரசால் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு, ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலையும், அதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.214 ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் வருகை பதிவு கடந்த ஆண்டு முதல் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய மொபைல் கண்காணிப்பு முறை மூலம் இதற்காக ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன்மூலம் வருகை பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆப்பில் காலையில் தொழிலாளர்கள் வருகையின்போது ஒருமுறையும், பணி முடிந்த பின் ஒருமுறையும் வருகைப்பதிவு செய்யப்படுகிறது. இந்த சூழலில், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆப்சென்ட் போட முடியாது. வெறும் எச்சரிக்கை மட்டுமே செய்துவிட்டு செல்கின்றனர். இதை பயன்படுத்தி பல கிராமங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை கூடுதலாக காண்பிக்க காலை 6.30 மணிக்கே வேலை செய்யும் தொழிலாளர்களின் அட்டை பணி செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் தொழிலாளர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து விடுகின்றனர். மீண்டும் பல மணி நேரம் கழித்து வேலைக்கு சென்று கணக்கு காட்டி வருகின்றனர்.

இப்படி காலை, மாலையில் வருகை பதிவுக்கு மட்டும் சென்று வருவதாக புகார்கள் உள்ளது. இதை கண்காணிக்கவும், புகார் செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணிகளை அடிக்கடி சென்று கட்டாயம் களஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வு செய்யாமல் விடுபட்டு முறைகேடுகள் ஏதேனும் நடந்தாலும், பணியில் முரண்பாடுகள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: 100 நாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினசரி பணிக்கு வருவோர் குறித்து, காலை மற்றும் மதியம் என்எம்எம்எஸ் எனப்படும் மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலான ஊராட்சிகளில் குடும்பத்திற்கு வழங்கும் சராசரி வேலை நாட்கள் மிகக்குறைவாக உள்ளன.

இது தொடர்ந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ஊராட்சிகளிலும், குக்கிராமங்களிலும், தினசரி வேலை நடக்க வேண்டும். கண்டிப்பாக சமுதாயப் பணிகள் நடக்க வேண்டும். இதில் முரண்பாடுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர், ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவில் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது தவறுகள் இருந்தால் கண்டிப்பாக அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

*வேலைக்கு டிமிக்கி 16 பேருக்கு ஓராண்டு தடை
பெரம்பலுார் ஒன்றியம் எளம்பலூரில் 100 நாள் வேலைதிட்டத்தில் குளம் அமைக்கப்படும் பணியை கலெக்டர் கற்பகம் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த வருகைப் பதிவேட்டை பார்வையிட்டார். பின்னர் பணியிலிருந்த தொழிலாளர்களை எண்ணிப் பார்த்தார். இதில் வருகைப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களை விட 16 பேர் குறைவாக பணி செய்து கொண்டிருந்தனர். இது குறித்து பணித்தளப் பொறுப்பாளரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் உரிய விளக்கம் அளிக்குமாறும், கையெழுத்திட்டு விட்டு பணிக்கு வராத 16 பேரின் அடையாள அட்டைகளை நீக்குமாறும் கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பணித்தளப் பொறுப்பாளரை நீக்குமாறும் உத்தரவிட்டார். இதனால் இந்த 16 பேருக்கும் அடுத்த ஓராண்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

* திடீர் ஆய்வில் சிக்கிய பொறுப்பாளர்
கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள சித்தேரி ஊராட்சியில், நூறுநாள் வேலை திட்டத்தில் நடந்து வரும் நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு பணியில் மோசடியை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு நபர் வீடியோ எடுத்துள்ளார். அவர் பொறுப்பாளரிடம், 118 பேர் வேலை செய்வதாக வருகை பதிவேட்டில் உள்ளது. ஆனால் 25 பேர்தான் உள்ளீர்கள். மீதமுள்ளவர்கள் எங்கே? இதனை யாரிடம் கேட்பது என்கிறார், உடனே பொறுப்பாளர் மற்றொரு இடத்தில் கொஞ்சம் பேர் வேலை செய்கிறார்கள் என பதிலளிக்கிறார்.

அங்கே வேலை செய்பவர்கள் 20 பேர் என்றாலும், மீதம் 70 பேர் எங்கே? என்று கேட்க, கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டதாக பொறுப்பாளர் பதில் சொல்கிறார். அப்படியென்றால் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் உங்களுக்கு கமிஷன் எவ்வளவு, இதை யாரிடம் கேட்பது என்று கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். அதற்கு பதிலளிக்க முடியாமல் திட்ட பொறுப்பாளர் சிக்கி திணறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் கேள்வி கேட்பவரையும் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

*மாவட்டங்கள் தோறும் குறைதீர்ப்பாளர் நியமனம்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பாக, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் புகார்களை அலுவலகத்தில் அல்லது களஆய்வின் போது குறைதீர்ப்பு அலுவலரிடம் பதிவு செய்யலாம்.

விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைதீர்ப்பு அலுவலரால் புகார் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. குறைதீர்வு அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலைதளத்தில் வெளியிடப்படுகிறது என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

4 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi