உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய கர்நாடகா மீது காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவிடம் நாளை புகார்: தமிழ்நாடு அரசு முடிவு

சென்னை: கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி, காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு சார்பில் நாளை புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டிற்கு செப்.12ம் தேதி வரை 5 ஆயிரம் கன அடி நீரை காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி, திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தங்களுக்கு இந்த அளவு தண்ணீர் போதாது என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், முறையாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரை தராமலும், ஏற்கனவே வழங்கி வரும் தண்ணீரின் படிநிலையை நாளுக்கு நாள் கர்நாடக அரசு குறைத்தும் வருகிறது. குறிப்பாக, கடந்த 4 நாட்களில் தண்ணீர் திறப்பதை 4 ஆயிரம் கன அடியாக கர்நாடக அரசு குறைத்துள்ளது. அந்தவகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கர்நாடக அரசு செயல்பட்டு வருவதால் நாளை காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு தரப்பில் புகார் மனு அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி நீர் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 21ம் தேதி தான் வருகிறது. கர்நாடக அரசு குறைந்த அளவில் நீர் விடுவிப்பதை கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் வரும் 20ம் தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழுவில் முறையிட இருப்பதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக அரசும் விரிவான விளக்கத்தை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா

கிராம பஞ்சாயத்து தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்

தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப்படுத்திய இலங்கை அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்