தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு போட்டி: குலுக்கல் முறையில் தேர்வு

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால் குலுக்கல் முறையின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வ ந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சுயநிதி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதும் போது 25% இடங்களில், சமூகத்தில் பின்தங்கிய, நலிவுற்ற, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

2024-2025ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதுதொடங்கியுள்ளது. அதனால் 25% இடங்களில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு அதிகமாகவே பெற்றோர் விண்ணப்பித்து இருந்தனர். சென்னையில் 636 பள்ளிகளில் சேர விருப்பம் தெரிவித்து 10 ஆயிரத்து 342 விண்ணப்பங்கள் வந்திருந்தன.

அதன் பேரில் அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் கல்வி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளிகளின் முதல்வர்கள், பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான நிகழ்வுகள் சென்னையில் நேற்று பல்வேறு பள்ளிகளில் நடந்தது. சென்னையில் உள்ள பள்ளிகளில் 25% இடங்கள் குறைவாக இருந்த நிலையில் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால் கடும் போட்டி நிலவியது. அதனால் குலுக்கல் முறையின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டது.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி